சேலம்: நேருக்கு நேராகப் பேருந்துகள் மோதியதில் ஏழு பேர் பலி!

Saturday 01, September 2018, 22:48:29

சேலம் மாமாங்கம் அருகில் இன்று அதிகாலை 2மணியளவில் நேருக்கு நேர் 2 பேருந்துகள் மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிர் இழந்தனர்; 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலத்தில் இருந்து பூக்கள் ஏற்றி பெங்களுருவுக்கு சென்று கொண்டிருந்த  மினி டெம்போ பழுது ஏற்பட்டதன் காரணமாக மாமாங்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நின்றிருந்த அந்த டெம்போவின் பின்புறத்தில் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அதிவேகத்தில் சென்ற அரவிந்த் என்ற தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது.

இதில் கட்டுப்பாடு இழந்த பேருந்து கட்டுப்பாடு இழந்து செண்டர் மீடியனையும் தாண்டி எதிர்ப்புற சாலைக்குச் சென்றது.  எதிர் திசையில் பெங்களுருவில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி சொகுசு பேருந்து மீது பலமாக மோதியது. இதில் சொகுசு பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில், தலை குப்புற கவிழ்ந்தது.

கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் முன் பகுதி முழுவதும் உருக்கலைந்து போனது. இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறவே, அருகே இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அருகே இருந்த பொது மக்களும் விரைந்து வந்து இடிப்பாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தலைகுப்புற கவிழ்ந்து இருந்த சொகுசு பேருந்தின் கீழே சிக்கி உடல் நசுங்கி இருந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த கோர விபத்தில், சொகுசு பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ககப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, சேலம் அரசு மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைகிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள் யார் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுமுறை நாளையொட்டி, பெங்களுருவில் இருந்து தங்களது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்ற போது, இந்த விபத்து நடந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz