பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியுடன் அமித் ஷா திடீர் சந்திப்பு

Tuesday 09, April 2019, 17:07:36

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை தேசிய தலைவர் அமித் ஷா இன்று திடீரென்று சந்தித்தது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பளிக்கவில்லை. அத்வானி தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதியில் இந்த முறை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக சத்யதேவ் பச்சவுரி நிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜக தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் ஆரம்பகாலத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கும் எதிர்க்கட்சியினர் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது கருத்துக்கு மாறுபட்ட வகையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி எதிர்கருத்து ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்

கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை தேச விரோதிகள் என்று சித்தரிக்க கூடாது என்னும் வகையில் அவர் தெரிவித்த கருத்து பாஜகவில் நிலவிவரும் பனிப்போரின் உச்சகட்டமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களின் இல்லங்களை தேடிச்சென்று தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை சந்தித்தார்.

இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz