எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக முதலில் வழக்குப் போட்டுத் தடுத்து நிறுத்தியது நான்தான்; அன்புமணியல்ல - தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேட்டி

Friday 12, April 2019, 17:37:32

சிறப்புக் கட்டுரை 1

 

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலத்திலிருந்து சென்னைக்கு 8 வழி பசுமைச்சாலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. அதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தங்களது வாழ்வாதாரமான விவசாய விளைநிலங்கள் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆளும் அரசு அதிகார பலத்தை கொண்டு, போலீஸாரைக் கையில் வைத்துக் கொண்டு ஏழை விவசாயிகளை அடித்தும், பொய் வழக்குகள் பதிந்தும் அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது.

இந்த இந்த திட்டத்துக்குத் தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்,  தர்மபுரி பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்பட பலரும் வழக்குத் தொடர்ந்தனர்.

கடந்தாண்டு முதல் இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வந்தது. 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்பிரல் 8ந்தேதி வெளியானது. 

இத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற்று புதிய அரசாணை வெளியிட வேண்டும். அதன்பின் புதிய அரசாணை வெளியிட வேண்டும். நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது. வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றத்தை 8 வாரத்திற்குள் சரி செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

எனவே 2018 ம் ஆண்டு இதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அதிரடியாகத் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருமகிழ்வுடன்  வரவேற்பு தெரிவித்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை அன்புமணி எம்.பி.க்கும் பாகவுக்கும் கிடைத்த தனிப்பெரும் வெற்றியாகச் சில ஊடகங்களிலும். பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. ஆனால், எட்டு வழிச்சாலைத் திட்டத்தை வழக்குப் போட்டுத்  தடுத்து நிறுத்தியது நான்தான்; அன்புமணியல்ல என்று இதற்கு மறுப்புத் தெரிவித்துக் கண்டனக் குரலை எழுப்பியிருக்கிறார் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த அ.பள்ளிப்பட்டியில் வசிக்கும் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர்.

“எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை பாமகவின் அன்புமணி முதலில் போட்டதாக பொய்யுரைப்பதா? பாமகவும், அன்புமணியும் போட்ட வழக்கினால்தான் இத் தீர்ப்பு வந்ததது என்று இனிமேலும் பொய் சொல்ல வேண்டாம். பாடுபட்டு விளைய வைத்தது நான்! அதனை அறுவடை செய்வது நீங்களா? நேர்மையிருந்தால் என்னோடு இதுகுறித்து விவாதிக்க அன்புமணி தயாரா?” என்று உரத்துக் குரல் எழுப்பியுள்ள விவசாயி  கிருஷ்ணமூர்த்தி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர். இருந்து ஐந்து மாவட்டங்களிலும் இத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை வலுப்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர்.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி நம்மிடம்  கூறும்போது, “ எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுள் நானும் ஒருவன். இந்த ஐந்து மாவட்டங்களில் எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் அடாவடியாக விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி விவசாயிகளை போராடுவதற்காக ஒருங்கிணைத்த ஒருங்கினைப்பாளர்கள் பலர். தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நான் இதில் பங்கு பெற்றேன்.

எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டு அவ்வழக்கின்மூலம் (வழக்கு எண். W.P. No. 16630/2018) எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடையாணையையும் பெற்றது எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. கிருஷ்ணமூர்த்தியாகிய நான்தான். எனவேதான், எட்டு வழிச்சாலைக்கு எதிரான தடை உத்தரவு தீர்ப்பின் முதல் பக்கத்திலேயே என் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஆனால், இந்த உண்மையினை மறைத்து பாட்டாளி மக்கள் கட்சியும், சில ஊடகங்களும் ஏதோ அன்புமணி மட்டுமே எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குப் போட்டு இத் தீர்ப்பை பெற்றுத் தந்ததாக நாகூசாமல் பொய்யுரைக்கிறார்கள். பல இடங்களில் எட்டுவழிச் சாலைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் பாமகவின் வழக்கே முதல் வழக்கு என்றும் நாக்கூசாமல் பொய்யுரைக்கிறார்கள்.

எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை வழங்கி நீதிபதிகள் வழங்கிய 115 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் அன்புமணி பெயரோ, அவரின் வழக்குரைஞர் பெயரோ ஒரு இடத்தில்கூட குறிப்பிடப் படவில்லை. ஆனால் யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ இனிசியல் போடுவது போல், நான் போராடிப் பெற்றத் தீர்ப்புக்கு, பாமகவும், அன்புமணியும் உரிமை கொண்டாடப் பார்க்கிறார்கள். சில ஊடகத்தினரும் இத் தவறைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாமகவும், அன்புமணியும் போட்ட வழக்கினால்தான் இத்தீர்ப்பு வந்ததது என்று இனிமேலும் பொய் சொல்ல வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். அப்படி யாரேனும் நினைத்தால், துணிச்சல் இருந்தால் இது குறித்து என்னோடு நேரடி விவாதத்திற்கு வருமாறு அன்புமணிக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அந்த விவாதத்தில் நான்தான் எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கை முதலில் போட்டேன் என்பதை நிரூபித்துக் காட்டவும் தயாராக இருக்கிறேன்” என்று ஆவேசமாகக் கூறி முடித்தார் கிருஷ்ணமூர்த்தி.

இவர் கூறுவது முற்றிலும் உண்மை என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவுக் குரல் எழுப்புகிறார். நம்மிடம் இது குறித்து அவர் பேசும்போது, “எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக முதன்முதலில் வழக்குத் தொடுத்தவர் கிருஷ்ணமூர்த்திதான். அதன் பிறகுதான் பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் அதன்பின் நாம் தமிழர் கட்சியும் வழக்குத் தொடுத்தன. இதற்கடுத்ததாகத்தான் பாமக வழக்குத் தொடுத்தது. அதற்கடுத்ததாக இந்தப் பட்டியலில் சேலம் விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர்.  

கிட்டத்தட்ட 102 பக்கங்களைக் கொண்டதாக இந்த வழக்கின் தீர்ப்பில் எந்தவொரு இடத்திலும் பாமக தரப்பு வழக்குரைஞர் இதுபோன்று ஒரு வாதத்தை வைத்தார் என்பது போன்ற குறிப்பு காணப்படவில்லை. உதாரணத்துக்கு சேலம் விவசாயிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் நாகஷைலா அமெரிக்காவில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை தன்னுடைய வாதத்தில் மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மேற்கோள் நீதிபதிகளின் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.

எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்காக நிலங்களை நீங்கள் கையகப் படுத்திய விதம் தவறு என்று கோர்ட்டு குறிப்பிடுகிறது. தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக இந்த எட்டுவழிச் சாலையைக் கட்டாயம் கொண்டு வந்தே தீருவேன் என்று சொன்னவர்களுடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டு, உள்ளிருந்தபடியே அந்தத் திட்டத்தை நிறுத்துவேன் என்று அன்புமணி சொன்னது மிகவும் வேடிக்கையான ஒரு விஷயமாக இருந்தது.

முதலமைச்சர் பழனிசாமி நான் கோர்ட்டின் ஆணைகளை நிறைவேற்றுவேன் என்று மட்டும் சொல்லி இருக்கிறார். அது ஒரு முதலமைச்சரின் கடமை. கோர்ட்டின் ஆணைகளை மதிக்க மாட்டேன் என்று சொல்லுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது,

எட்டுவழிச் சாலைத் திட்டம் கைவிடப்படுகிறது என்று தன்னுடைய கூட்டணிக் கட்சிகளை இவரால் சொல்ல வைக்க முடியவில்லை. முதல்வரோடு கூடவே தேர்தல் பிரசாரங்களுக்கு சென்று வரும் இவரால் அத்தகைய அழுத்தத்தை முதல்வரிடத்தில் நேரில் தர இயலாதா? மாறாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு போடப் போவதாகக் கூறுகிறார். இந்த வார்த்தைகளை மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்டவர்கள் மக்கள் முன் பொய்யை உண்மையாக்க முயலுவது ஆச்சர்யப்படத்தக்க விஷயம் அல்லவே” என்று முடித்துக் கொண்டார் அருள்.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz