ராணுவத்தினரின் சேவையை அரசியல் ஆக்குவதை தடுக்க வேண்டும்: குடியரசு தலைவருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம்.....

Friday 12, April 2019, 17:18:51

ராணுவத்தினரின் சேவையை அரசியல் ஆக்குவதை தடுக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 8 முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 150க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கையெழுதிட்டுள்ள இந்த கடிதத்தில், தேர்தலுக்காக ஓய்வுபெற்ற மற்றும் தற்போதுள்ள ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது.

ராணுவ படைகளின் நடவடிக்கைகளுக்கான பாராட்டுக்களை அரசியல்வாதிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

அரசியல் கட்சிகள் ராணுவம், ராணுவ சீருடைகள் அல்லது சின்னங்கள், ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். குறிப்பாக ராணுவ படைகளை, மோடியின் சேனை என குறிப்பிடுவதையும் நிறுத்த வேண்டும்.

தேர்தல் பிரசாரத்திற்காக கட்சி தொண்டர்கள் ராணுவ சீருடைகளை அணிந்திருப்பது போன்று புகைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் படங்கள், ராணுவ படைகள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவற்றையும் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து இப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று ஜனாதிபதி மாளிகை மறுத்துள்ளது. 

முன்னதாக, ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகள் 66 பேர் கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் குறித்து பேசிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோ, சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாடுகள் கவலை தருவதாக கூறியுள்ளார். மேலும், நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் உலகளவில் புகழ் பெற்றிருந்ததாகவும், ஆனால் தற்போது அதன் மதிப்பு சீர்குலைந்து விட்டதாகவும் ரிபெய்ரோ கூறியுள்ளார். 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz