தர்மபுரி: முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கமா?

Tuesday 16, April 2019, 22:26:59

இன்று காலை முரசொலியில் தர்மபுரி நகரத்தைச் சேர்ந்த வ. முல்லைவேந்தன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது

தர்மபுரி மாவட்ட தி.மு.க.வில் தொண்டர்கள் செல்வாக்குள்ள  தலைவரான முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டு ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இப்படி ஒரு நடவடிக்கையா என்று தர்மபுரி திமுகவினர் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது.  

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தவறான தகவல் என்று நம்மிடம் பேசிய நம்பகரமான வட்டங்கள் நம்மைக் குழப்பமடைய வைத்தன.

அப்படியானால் இன்றைய முரசொலியில் வந்துள்ள அறிவிப்பு விளம்பரம்?...

பொறுமையாகக் கடைசிவரை தொடர்ந்து படியுங்கள்!

மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசத் தயங்காதவர், தொண்டர்களைக் காப்பாற்ற முதல் ஆளாகக் களத்தில் இறங்கிக் குரல் கொடுப்பவர், வெள்ளந்தியான மனிதர் என்றெல்லாம் சொல்லப்படும் முல்லைவேந்தன், அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர்.

முதன் முதலில் அ.இ.அ.தி.மு.க பேச்சாளராகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முல்லைவேந்தன், பிறகு திமுகவில் இணைந்து தர்மபுரி மாவட்ட செயலாளராக ஆனார். தி.மு.க.வின் சார்பில் உறுப்பினராக1989, 1996, 2006 ஆம் ஆண்டுகளில் மொரப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனார்.  

தி.மு.க. அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 1996இல் நியமிக்கப்பட்டார். 2001 ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். 2001 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முல்லைவேந்தன் தோல்வியுற்றார். அதன் பிறகு மீண்டும் 2006 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்றார்.

2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, அப்போது தர்மபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சித் தலைமை.

இதனால் கோபமடைந்த முல்லைவேந்தன் மு.க.ஸ்டாலினைப் பற்றிய கடுமையான விமர்சனம் செய்து பேட்டியளித்ததோடல்லாமல் எந்தத் தவறும் செய்யாத தான் அந்த நோட்டீசுக்கு விளக்கமளிக்கவோ அல்லது மன்னிப்போ கோரப் போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார். இதன் தொடர்ச்சியாக முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி 2015 ஆண்டு சூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.  

வ. முல்லைவேந்தன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் ஆசிரியராக தன் வாழ்வைத் துவக்கியவர். இவர் தன் அரசியல் வாழ்வில் முதலில் இருந்தவர். பின் தி.மு.கவில் இணைந்து தருமபுரி மாவட்ட தி. மு.க. செயலாளராக ஆனார். தமிழக சட்டமன்ற உறுப்பினராக1989, 1996, 2006 ஆம் ஆண்டுகளில் மொரப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த முல்லைவேந்தன் தன்னுடைய ஆதரவாளர்கள் விருப்பத்துக்கிணங்க தே.மு.தி.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது வருகை விஜயகாந்தால் வரவேற்கப்பட்டாலும் உள்ளூர் வி.ஐ.பி.களுக்கு அது ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஒன்றிணைந்து முல்லைவேந்தனுக்கு எதிராகச் செய்த லாபி காரணமாக அவரால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே மீண்டும் அரசியலில் இருந்து முல்லைவேந்தன் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

இதனிடையே தர்மபுரி மாவட்ட தி.மு.க.வை வழிநடத்திச் செல்ல பொருத்தமானவராக முல்லைவேந்தன் இருப்பார்; அவர் கட்சியில் இணைந்தால் கட்சிக்கு மேலும் பலம் அதிகரிக்கும் என்ற உள்ளூர்த் தொண்டர்களின் குரல் கட்சித் தலைமையை எட்ட அங்கிருந்து முல்லைவேந்தனுக்கு சிக்னல் தரப்பட்டது.

ஸ்டாலினை எதிர்த்துவிட்டு மீண்டும் அவர் தலைமையை ஏற்று தி.மு.க.வில் செயல்படுவதா என்றுத் தயங்கிய முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்கள் ஆலோசனையை ஏற்று, மீண்டும் திமுகவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைந்தார்.

மீண்டும் தி.மு.க.வில் இணைந்து முனைப்போடு செயல்பட்ட போதிலும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை கட்சித் தலைமை அளிக்கவில்லை. இதில் வருத்தத்தில் இருந்த முல்லைவேந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரைப் பார்த்த ஸ்டாலின் ஒன்றியத் தலைவருக்கு எதிராக நீங்கள் அரசியல் செய்வதாக எனக்குப் புகார்கள் வந்துள்ளன என்று கூறியுள்ளார். உண்மைக்கு மாறான புகார் அது என்று முல்லைவேந்தன் ஆவேசமாக பதில் சொல்ல, அதை ஏற்க மறுத்த ஸ்டாலின் முல்லைவேந்தனின் மனம் நோகும்படியாக, அந்தப் புகாருக்கு நானே சாட்சி என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரிடம் எதுவும் பேச விரும்பாத முல்லைவேந்தன் அங்கிருந்து ஊருக்குத் திரும்பி விட்டார்.

அதன் பிறகு தி.மு.க. பணிகளில் முன்பு போல ஆர்வம் காட்டாமல் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். கட்சி கூட்டங்களைத் தவிர்த்துவிட்டு கம்பைநல்லூரில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயத்தைக் கவனித்து வந்தார்.

அந்தத் தோட்டத்தில் வைத்து  அவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்த பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்,  அ.ம.மு.க.வின் பழனியப்பன் போன்றார் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படிக் கேட்டுள்ளனர்.  அவர்களுக்குப் பதில் மரியாதையாக முல்லைவேந்தனும் சால்வை அணிவித்து வாழ்த்து சொல்லி அனுப்பியுள்ளார்.

இந்தப் படங்களை கட்சி மேலிடத்துக்கு புகாராக முல்லைவேந்தனுக்கு எதிரான சிலர் அனுப்பி வைத்தனர். இதன் விளைவாக இன்று காலையில் முரசொலியில் தர்மபுரி நகரத்தைச் சேர்ந்த வ. முல்லைவேந்தன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சஸ்பெண்ட் அறிவிப்பு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கானதல்ல; ஓரங்கட்டப்பட்டுள்ள முல்லைவேந்தன்  மாணவர் பிரிவினைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர் தர்மபுரி திமுகவினர்.

நம்மிடம் பேசிய தர்மபுரி திமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து நம்மிடம் விரிவாகவே விளக்கினர்.

தற்போது நீக்கப்பட்டுள்ள முல்லைவேந்தன் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய இனிஷியலும் வ.தான்! இவர் தர்மபுரி நகரத்தைச் சேர்ந்தவர். இதுதான் முரசொலி விளம்பரத்திலும் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பாப்பிரெட்டிப்பட்டிக்காரர். அவரைக் குறிப்பிடுவதாக இருந்தால் அவரது ஊரின் பெயரைக் குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் என்றும் கட்டாயம் போட்டிருப்பார்கள். எனவே இன்றைய அறிவிப்புக்கும் முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பில்லை என்றார் தெளிவாக!

ஆனால் “உண்மையில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கும் இது போன்ற அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதையாக தொண்டர்களின் பல்ஸ்சினைத் தெரிந்து கொள்ளவே இன்றைய விளம்பரம் வெளியாகியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது” என்றார் அரசியல் நோக்கர் ஒருவர்....

அரசியல்னா..... இது அரசியல்!

(இது தொடர்பாக முல்லைவேந்தனைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்தோம். ஆனால் அவர் இணைப்பில் கிடக்கவில்லை. விளக்கம் கிடைத்ததும் அது விரைவில் வெளியிடப்படும்.)

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz