சேலத்தில் ஒரே நாளில் 33 ரவுடிகள் கைது!

Friday 26, April 2019, 17:27:07

சேலம் மாநகரப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 33 ரவுடிகள் இன்று கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம் கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டும், வழிப்பறி செய்தும் , பொதுமக்களை அச்சுறுத்தியும் வருவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து பல்வேறு சமூகக் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொது மக்களை நிம்மதியிழக்கச் செய்து அச்சுறுத்தலைத் தந்து வந்த ரவுடிகளைக் கண்காணித்து கைது செய்து சிறையில் அடைக்க  சேலம் மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் ஆணையிட்டிருந்தார்.

இதன்பேரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல ரவுடி பல்லு குமார் மற்றும் செல்வம் ,ஜெயக்குமார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது போல பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ரவுடிகள் திவாகர், கலையரசன் ஆகியோரும் , அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லையில் ரவுடிகள் அஜித் மற்றும் கோபியும் , கன்னங்குறிச்சி காவல் நிலைய எல்லை பகுதியில் மண்டை விஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாநகரப் போலீசார் இன்று ஒரு நாள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக  மட்டும் மொத்தம் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களை தவிர தலைமறைவாக உள்ள இருபதுக்கும் மேற்பட்ட ரவுடிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

- சுதாகர்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz