சேலம் மாவட்டத்தில் புள்ளிமான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! - வனவிலங்குகள் கணக்கெடுப்புக் குழுவினர் தகவல்.....

Saturday 27, April 2019, 17:39:55

சேலம் மாவட்ட வனத்துறை சேலம் நேச்சர் வைல்டு லைப் ட்ரஸ்ட் ஆகியோர் இணைந்து சேலம் மாவட்டத்திலுள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் இந்த கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட வன அதிகாரி பெரியசாமி தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு 50 தன்னார்வத் தொண்டர்கள் மூலம் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் சுற்றி உள்ள வனப்பகுதி,   சேர்வராயன் மலையான ஏற்காடு அடிவாரம் மற்றும் கருமந்துறை உள்ளிட்ட வனபகுதியில் இந்த ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.

இந்த கணக்கெடுப்பு பணியில் வன அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வன ஆர்வலர்கள் கலந்துகொண்டு வன விலங்குகளை கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.

அடர்ந்த காடுகளுக்கு செல்லும் இவர்கள் கால்நடைகளின் தடம் அதனுடைய எச்சம் தண்ணீர் அருந்தும் இடம் ஆகியவற்றை கொண்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வன விலங்குகள் கால் பதிவுகளைக் கொண்டு எந்த மாதிரியான விலங்குகள் இங்கு வந்து செல்கின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

கால் தடங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் பதிவு செய்யும் அலுவலர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கால் பதிவு கொண்ட விலங்குகள் எங்கு செல்கின்றன,  எங்கு இடம் மாறுகின்றன என்பது குறித்து எதிர்காலத்தில் கணக்கிடவும் இந்த ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் சேலம் சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள  உயிரியல் பூங்கா,  கருங்காலி,  தேக்கம்பட்டி,  டேனிஷ்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணியில் இன்று ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பு பணி நாளையுடன் முடிவடைகிறது  தொடர்ந்து இதனுடைய ஒட்டுமொத்த கால்நடைகளின் எண்ணிக்கை புதிய விலங்குகளின் வருகை மற்றும் அதனுடைய வழித்தடம் போன்றவை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட வனத்துறைக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் அனுப்பப்பட உள்ளது.  

வன விலங்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதை பாதுகாக்கும் வசதி மற்றும் அதற்கான உணவு முறைகள் குறித்து வன துறையினர் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த பணி நடைபெறுவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கோகுல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது என்றும் இந்த கணக்கெடுப்பில் அயல்நாட்டு பறவைகள் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து அதன் சீதோஷ்ண நிலைகளை அனுபவித்துவிட்டு மீண்டும் அயல்நாடு செல்வதாகவும் தெரிவித்தார்.

தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் முதல் முறையாக வன விலங்குகளின் எண்ணிக்கை,  அதன் வழித்தடம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது என்றும் இந்த கணக்கெடுப்பில் சேலம் மாவட்டத்தில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் காட்டு மாடுகளான காட்டெருமைகளின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து இருப்பதாக  தெரிவித்தார் . மேட்டூர் வனத்துறை பகுதிகளில் யானைகள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz