ஒகேனக்கல்: உறவினர் பெண்ணுடன் சுற்றுலா வந்த தர்மபுரி இளைஞர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

Wednesday 01, May 2019, 19:40:05

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு இன்று மே தின விடுமுறைக்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

இதில் தர்மபுரி மாவட்டம் ஜருகு கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் ஈரோட்டினைச் சேர்ந்த தனது அக்காள் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து ஒகேனக்கலுக்கு வந்துள்ளார்.

அப்பொழுது மலைச்சாலை அடுத்துள்ள வனப்பகுதியருகே வந்த பொழுது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முனுசாமியை மூன்று முறை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு விட்டு அவருடன் வந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வனப்பகுதிக்கு இழுத்து சென்றனர்.

உடனே, அந்த இளம்பெண் கத்திக் கூச்சலிட்டு அவர்களிடம் இருந்து தப்பி தார்ச்சாலைக்கு வந்து வாகன ஓட்டிகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அப் பகுதி வழியாக வந்த பொது மக்கள் அந்த இளம்பெண்ணுக்குப் பாதுகாப்பு அளித்து உடனடியாக ஒகேனக்கல் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுடப்பட்ட முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தது கண்டறியப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடன் வந்த இளம்பெண்ணிடம் அவர்களது பெற்றோர்கள் முகவரி கேட்டு அவர்களுக்குத் தகவல் தந்து வரவழைத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் வனப்பகுதியில் தேடும் பனி தீவிரப்படுத்துப்பட்டுள்ளது.கொலையாளிகள் வெளியில் தப்பிச் செல்லா வண்ணம் சோதனை சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz