“சரணடைந்த கதிர்வேலுவை போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுன்ட்டர் என்று திசை திருப்புகின்றனர்’ - மக்கள் கண்காணிப்பகத்தின் களஆய்வு வெளிப்படுத்தும் உண்மைகள்!

Saturday 04, May 2019, 19:32:07

சேலத்தில் போலீஸ் அதிகாரிகளை வெட்டி விட்டு தப்ப முயன்ற கதிர்வேல் என்பவர் கடந்த மே மாதம் இரண்டாம் தேதி வியாழக்கிழமையன்று  குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு என்ற பகுதியில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.

தான் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்ததை அறிந்த கதிர்வேலு, வீராணம் போலீசில் தானாகவே சரணடைந்தார் எனவும் அப்படிச் சரணடைந்த கதிர்வேலுவை வீராணம் போலீசிடம் இருந்து கேட்டுப் பெற்ற காரிப்பட்டி போலீசார், அவரை சுட்டுக் கொன்றனர் என்றும் இது அரசியல் மற்றும் சாதி சார்ந்து நடத்தப்பட்ட கொலை என்று  இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் தரப்பில் பரவலாகப் பேசப்படுகிறது.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கதிர்வேலுவின் ஊரான குள்ளம்பட்டிக்கு உண்மைகளைக் கண்டறிய களஆய்வினை மக்கள் கண்காணிப்பகம் கடந்த மே 3ந் தேதி மேற்கொண்டது. கள ஆய்வினை மேற்கொண்ட மக்கள் கண்காணிப்பகத்தின்  ஒருங்கிணைப்பாளரான செந்தில்ராஜாவைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம்.  

“கதிர்வேலு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குள்ளம்பட்டியில் ஒருவிதமான அச்சத்தை உருவாக்கியுள்ளதை எங்களால் உணர முடிந்தது. இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் பலரும் ஒதுங்கிச் சென்றனர். “நடந்ததைப் பத்தி இப்போ என்ன பேசி என்னங்க பிரயோசனம்? செத்தவன் திரும்ப வந்துட போறானா என்ன? பேசாமல் அமைதியாக இருந்தாலாவது எங்களுக்கு மேற்கொண்டு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்” என்று ஒரு சிலர் விரக்தியுடன் முணுமுணுத்தனர்.

கதிர்வேலுவின் வீட்டைப் பார்த்தோம். மின்சார வசதி கூட இல்லாத மிகச் சாதாரணமான வீடு அது. பூண்டு, வெங்காயம் விற்கும் தொழிலைச் செய்து வந்த கதிர்வேலு அவ்வப்போது ஆட்டோ ஓட்டி வந்து இருக்கிறார். டிரைவிங் தெரியும் என்பதால் வேலை இல்லாமல் ஓய்வாக இருக்கும் நேரங்களில் உள்ளூர்ப் பிரபலமான காட்டூர் ஆனந்தன் என்ற திமுக பிரமுகரிடத்தில் கார் ஓட்டச் சென்று விடுவாராம் அந்த வகையில் ஓய்வாக இருக்கும் சமயங்களில் காட்டூர் ஆனந்தனுடன் கதிர்வேலு பெரும்பாலும் இருந்துள்ளார்.

பிரபல ரவுடி கதிர்வேலு சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கதிர்வேலுவைப் பற்றி அந்த ஊரில் விசாரித்த வரையில் யாரும் அவரை ரவுடி என்றோ, வேறுவிதமான எதிர்மறையான எந்த தகவலையுயோ நம்மிடத்தில்  சொல்லவில்லை.

மாறாக, “எந்த வம்பு தும்புக்கும் போகாத பையன்; தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவன். அவனை அநியாயமாகச் சுட்டுக் கொன்னுட்டாங்க. பாழாய்ப்போன சாதியும், அரசியலுமே அவன் வாழ்க்கை இப்படி முடிந்து போக காரணம்...” என ஆற்றாமையுடன் கதிர்வேலுவை நன்கு அறிந்த சிலர் நம்மிடம் புலம்பித் தள்ளினர்.

கதிர்வேலு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆலமரத்துக்காடு பகுதிக்கு நாங்கள் சென்றிருந்தோம். மிகப்பெரிய  ஆலமரம் ஒன்று அந்தப் பகுதி சாலையின் ஒரு புறத்தில் உள்ளது. சாலையின் மறு ஓரத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. செங்கல் சூளையில் பணிபுரியும் சிலரிடம் “இங்கு ஒரு ரவுடி போலீசாரை வெட்டிவிட்டுத் தப்பி ஓடிய சமயத்தில் போலீசார் அவனைச் சுட்டுக் கொன்றார்கள் என்று சொல்லப்படுகிறதே?” என்று என்கவுன்ட்டர் குறித்து விசாரித்தோம்.

“இந்த இடத்துல அப்படி எந்த சம்பவமும் நடந்த மாதிரி எங்களுக்குத் தெரியலீங்க... சம்பவம் நடந்ததாச் சொல்லுகிற அன்றைக்கு காலையில ரெண்டு வெள்ளை ஜீப்புகள், ஒரு சிவப்பு ஜீப் என மொத்தம் மூணு ஜீப்புகள் இந்த ஆலமரத்தடியில் வந்து நின்னுச்சு. அதிலிருந்து இறங்கின போலீஸ் அதிகாரிங்க அந்த இடத்துல நின்னுத் தங்களுக்குள்ளாகப் பேசிக்கிட்டாங்க.

ஒரு 15 நிமிஷம் அவங்க எல்லாம் அங்க இருந்தாங்க அப்புறம் அந்த இடத்தில இருந்து எல்லோருமாகக் கிளம்பிப் போய்ட்டாங்க. மத்தபடி, இங்க எந்தச் சண்டையும் நடக்கலை..... யாரையும் போலீஸ்காரங்க இங்க வச்சு சுட்டுக் கொன்னதாகவும் எங்களுக்கு தெரியலை. இங்க அன்னைக்கு துப்பாக்கி சத்தமோ, வேட்டு சத்தமோ எதுவுமே கேட்கலை” என்று உறுதிப்பட தெரிவித்தனர் இதை நாங்கள் பதிவு செய்து எடுத்து வந்துள்ளோம்.

நாங்கள் விசாரித்த மட்டில் நடந்திருப்பது என்கவுன்ட்டர் அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது. திருமணமாகாத 24 வயதான அந்த இளைஞனை காரிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுக்க அடித்து வதைத்து இருக்கிறார்கள். விடிந்த பின்னர் அவனை எங்கோ அழைத்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டு என்கவுன்ட்டர் செய்ததாக அறிவித்துள்ளனர் என்பது நாங்கள் விசாரித்த வரையில் தெரியவருகிறது.

அதே போல போலீசாருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் காயங்கள் உண்மையான தாக்குதலால் உண்டான காயங்களாகத் தெரியவில்லை; செயற்கையாக உருவாக்கப்பட்ட காயங்களாகவேத் தென்படுகின்றன. நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் இருந்து முன்னுக்குப் பின் முரணாகத் தரப்பட்ட பேட்டிகள் சம்பவத்தின் நம்பகத்தன்மை குறித்துப் பெரிதும் சந்தேகிக்க வைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சம்பவ இடத்தில் எந்தவிதமான இரத்தக் கறையினையும் எங்களால் காண முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்த உண்மையினை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டி, தேசிய மனித உரிமை ஆணையத்திலும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகாராகத் தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் பெற்றுத் தர மக்கள் கண்காணிப்பகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்வோம்” என்று நம்மிடத்தில் கூறினார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான செந்தில் ராஜா.

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz