டெல்லி:ராஜீவ் காந்தி பற்றி மோடி விமர்சனம் தவறில்லை -  புகாரை அதிரடியாகத் தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்.

Wednesday 08, May 2019, 19:32:46

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்து தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார். ராஜீவ் காந்தியை மோடி கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த வாரம் உத்தர பிரதேச பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. போபர்ஸ் வழக்கில் சிக்கிய உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார். இப்படி பிரதமர் மோடியின் பிரச்சாரம் நாளுக்கு நாள் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. 

போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதனால் மோடி பேசியது தவறான குற்றச்சாட்டு ஆகும். இதனால் இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக 8 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த 8 புகார்களில் அனைத்திலும், மோடி மீது தவறு கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு இந்த 9வது புகார் மீதும் முடிவு எடுக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடி ராஜீவ் காந்திக்கு எதிராக பேசியதில் எந்த தேர்தல் விதிமுறை மீறலும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது.பிரதமர் மோடி பேசியது, தேர்தல் விதிகளுக்கு புறம்பானது கிடையாது, அதனால் இந்த புகாரை தள்ளுபடி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz