சேலம்: நவீன எரிவாவு தகன மயானப் புகை வெளியேற்றும் குழாய் பழுதடைந்ததால் சுகாதாரம் சீர்கெட்டுவருவதைத் தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்...

Saturday 11, May 2019, 18:58:11

கடந்த திமுக ஆட்சியில், சேலம் மாநகரில் உள்ள முக்கிய மயானமான, சேலம் ஜான்சன்பேட்டை மயானத்தை நவீனமாக்கும் விதத்தில், நவீன எரிவாயு மின் தகன மயானமாக மாற்றி இதன் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்தது. திமுக ஆட்சியில் செய்த இந்த திட்டம், பொது மக்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்று இருந்தது.

இந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் மற்றும் இயந்திரங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பதாலும், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கின் காரணமாகவும், இந்த தகன மயானத்தில், உடல்களை எரிக்கும் போது ஏற்படும் புகையை வெளியேற்றும் ராட்சத குழாய் மிகவும் பழுதடைந்து உள்ளது.

இதன் காரணமாக உடலை எரிக்கும் போது, அதில் இருந்து வெளியேறும் புகை, அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் அங்கு வசிக்கும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். புகை மட்டுமல்லாமல் குழாயில் இருந்து வெளியேறும் சாம்பலும், குடியிருப்பில் உள்ள தண்ணீர், உடை ஆகியவற்றின் மீது படுவதால், பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், பழுதடைந்த இந்த குழாயை சரி செய்திட வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் பல முறை சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக பாதிப்பு அதிக அளவு இருப்பதால், அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் குறிப்பாக பெண்கள், இன்று காலை திடீர் என்று, மயானத்திற்கு பூட்டு போடுவதற்காக, மயானத்திற்கு முன்பு திரண்டனர். மேலும் அங்கு இன்று காலை உடலை எரிக்க வந்த நான்கு உடல்களை பொது மக்கள் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும்,  காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் சாமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல், மயானத்தின் முன்பே திரண்டு இருந்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், பழுதடைந்த குழாய்க்கு பதிலாக புதிய குழாய் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இதனை பொருத்தும் பணி துவங்கும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, புகை போக்கி பழுதடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அதனை சரி செய்திட மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்ததாகவும், ஏற்கனவே பொது மக்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு புதிய குழாய் வரவழைக்கப்பட்டதாகவும், இந்த குழாயும் பொறுத்தபடாமல் இருப்பதால், உடல் எரிக்கும் போது ஏற்படும் புகை மற்றும் சாம்பலால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் மற்றும் வயது முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz