திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் அலுவலகம் திடீர் முற்றுகை

Tuesday 14, May 2019, 18:50:32

திருச்சி பெல்  நிறுவனத்தின் பொது மேலாளர் அலுவலகத்தை திராவிடர் தொழிலாளர்  கழகம் சார்பில் பெல் வளாகத் தொழிலாளர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்யப் படாமல் நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் பெறப்பட்டு, தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இந் நிலையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மற்றும் ‘ஓவர் டைம்’ (ஓ.டி) ரத்து செய்ததால், தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, நிர்வாகத்  தரப்பில் இந்தப் பிரச்சினையை உடனடியாக சரி செய்து தருவதாக உறுதி தரப்பட்டது.

ஆனாலும் இதுநாள்வரை அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர் தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் பெல் நிறுவன முதன்மை நுழைவு வாயிலிலுள்ள பொது மேலாளர் (எச்.ஆர்) சமது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நேற்று மாலைக்குள் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறியதால், தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் பெல்வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சண்முகம், ராமலிங்கம், காமராஜ், சிங்கராஜ், செந்தில்குமார், மனோகரன், இளந்தமிழன், கோவிந்தராஜன், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz