கிள்ளை பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Tuesday 14, May 2019, 19:35:48

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப் பகுதி மக்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

உலக புகழ்பெற்ற பிச்சாவரம் சதுப்பு நில மான்குரோவ் காடுகளை அழிக்க மத்திய அரசு சதி செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலரும் டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு மையத்தின் தலைவராக செயல்பட்டு வருபவரும் கிள்ளை பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான கிள்ளைரவிந்திரன் நம்மிடம் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“ஹைட்டோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த எடப்பாடி அரசின் முழு ஒத்துழைப்போடு, நிறைவேற்ற வேதாந்தா குழுமத்திற்கு மோடி அரசு  அனுமதி அளித்துள்ளது.டெல்டா மாவட்டங்களான நாகை,கடலூரிலும், அதோடு விழுப்புரம்,பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் 158 இடங்களில் கிணறு அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது..

இதில் பல கிணறுகள் விவசாய நிலத்தில் எப்போதும் போல் வருகிறது. இது தவிர ஒரு கிணறு சதுப்பு நில காடுகள் அடங்கிய கிள்ளை பிச்சாவரம் மான்குரோவ் காடுகளுக்கு நடுவே வருகிறது என்ற செய்தி இங்குள்ள மக்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது..

2004ல் ஏற்பட்ட சுனாமியில் கிள்ளை பேரூராட்சியில் 176 பேர் இறந்தார்கள். ஆனால், இந்த பிச்சாவரம் காடு உள்ள இடத்தில் ஒரு உயிரைகூட இந்த காடு பலி வாங்க அனுமதிக்க வில்லை.

அந்த நேரத்தில் சுடுகாடாய் காட்சியளித்த கிள்ளை சுற்றுலா வளாகத்திற்கு நான் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த போது புராதன நகர மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சத்தை முன்னாள் முதல்வர் மறைந்த  கலைஞர் வழகினார்.

நெருக்கடி நேரத்தில் இந்த பகுதியில்தான் ஒரே மேடையில் 9 திருமணங்களை கலைஞர் நடத்தி வைத்தார். MGR நடித்த இதயக்கனியில் தொடங்கி, இன்று திரிஷா போன்ற நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின்  ஷூட்டிங் இந்த அடர்ந்த காட்டில்தான் நடக்கிறது

இங்குள்ள எண்ணற்ற  கால்வாய்கள் நாரைகளுக்கு கூட தெரியாது என்பார்கள். பல ஆயிரம் வெளி நாட்டு பறவைகள் ஆண்டு தோறும் இங்கு வந்து செல்கின்றன. ஜப்பான்,மொரிஷியஸ் போன்ற நாடுகளின்  ஆராய்ச்சியாளர்கள் இங்குள்ள அரியவகைத் தாவரங்களில் இருந்து எய்ட்ஸ் உள்ளிட்ட பல கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கோபுர கட்டுமான பணியின் போது சோழமன்னருக்கு இருந்த வெண்குட்டம் எனும் நோய் இங்கு வந்ததால் சரியானது என்பது வரலாறு.

பல்வேறு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கிள்ளை வந்து இயற்கை அழகை ரசிக்கின்றனர். இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளின் ரம்யத்தை அழிப்பதோடு கிள்ளை பகுதியின் 13000 பேரின் வாழ்வாதாரத்தை இந்த அரசு நாசமாக்குகிறது. இத்தகு பெருமை மிகுந்த எங்கள் வனத்தை எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க முடியாது.

தில்லை அம்பலத்து தலவிருட்சமாக உள்ள தில்லை மரம் இந்த பிச்சாவரம் காட்டுப் மத்தியில் மட்டுமே உள்ளது. இந்த காடுகளை அழிப்பது என்பது சிதம்பரம் நடராஜர் ஆலயத்து தலவிருட்சத்தை அழிப்பதாகும்!

வேதாந்தாவிற்காக தூத்துக்குடியில் 13பேரைச் சுட்டுக் கொன்ற மோடியும், எடப்பாடியும் இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டதை நிறைவேற்ற வேண்டுமென்றால் 13,000பேரை சுட்டுக் கொன்று விட்டுதான் நிறைவேற்ற முடியும்!

இது குறித்து மிக விரைவில் மக்கள் முன்னெடுக்க உள்ள பெருந்திரள் போராட்டத்துக்கு இயற்கையின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் ஆர்வமும் அக்கறையும் உள்ள தோழர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்” என கிள்ளை பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருபவருமமான  எஸ். கிள்ளை ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz