சேலத்தில் சிறுவனைக் கடத்திய பெண்: ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

Tuesday 14, May 2019, 21:09:46

சேலத்தில் அதிகாலையில் 3 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண்ணை பொதுமக்கள் துரத்திப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தையைக் கடத்திப் பிடிபட்ட அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது அஸ்தம்பட்டி. இங்குள்ள மணக்காடு என்ற பகுதியில் ஜான்சன் பேட்டை கிழக்கு தெரு உள்ளது. இங்கு ஜஸ்டின் என்பவர் அவரது மனைவி மகாலட்சுமி, 3 வயது சிறுவன் சரவணன், 9 வயது சிறுமி நிவேதிதா ஆகியோருடன் வசித்து வருகிறார் .

இன்று காலை சிறுவன் சரவணன் தனது வீட்டுக்கு முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் சரவணனை தூக்கிக் கொண்டு ஓடினார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் திருடி திருடி என சத்தம் போட்டபடி அவளைப் பிடிக்க முயன்றனர். நடந்த சம்பவத்தை அறிந்து பதறிப் போன சிறுவனின் பெற்றோரும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சிறுவனை தூக்கிச சென்ற பெண்ணைத் துரத்திச் சென்றனர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய பின்பே சிறுவனைத் தூக்கிச் சென்ற பெண் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டாள்.  அந்தப் பெண்ணிடமிருந்து சிறுவனை காப்பாற்றிய பொதுமக்கள் அவனைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவனை கடத்திச் சென்றதால் அந்தப் பெண்ணை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதனால், ஜான்சன் பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடனே அங்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு அந்தப் பெண் யார் என விசாரணை செய்து வருகிறார்கள்.

பிடிபட்ட அந்தப் பெண் தனது பெயர் சாந்தி என்றும் விஜயா என்றும் வாகினி என்றும் திருப்பூரில் திருப்பூரை சேர்ந்தவர் என்றும் கோவையை சேர்ந்தவள்  மாறி மாறி கூறினாள் இதனால் அவள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை அறிந்த சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் சியாமளா தேவி அஸ்தம்பட்டி காவல் நிலையம் வந்து விசாரணை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுவன் சரவணன்  தாயார் மகாலட்சுமி கூறும்போது  "கடந்த ஒருவாரமாக ஜான்சன் பேட்டை  பகுதியில்தான் சிறுவனை தூக்கி சென்ற பெண்  சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.

இன்று காலை திடீரென எங்கள் வீட்டு அருகே வந்து சிறுவனை தூக்கி கொண்டு ஓடினாள். பிறகு பொதுமக்கள் மற்றும் நாங்களும் ஓடிச்சென்று சிறுவனை அந்தப் பெண்ணிடம் இருந்து மீட்டோம் இந்தப் பெண் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. போலீசார் அந்தப் பெண்ணிடம் முழு விசாரணை நடத்த வேண்டும் .

இந்த பகுதியில் காவல் துறையின் அடிக்கடி ரோந்து வந்து கண்காணிக்க வேண்டும் இவ்வாறு சிறுவன் சரவணனின் தாயார் மகாலட்சுமி கூறினார். சேலத்தில் அதிகாலையில் சிறுவன் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • சுதாகரன்
© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz