ஆத்தூர் : சாதியைச் சொல்லித் திட்டியதாகப் பொய் வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுத்த காவல்துறையினருக்கு பயந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்த நிதி நிறுவன அதிபர்!

Wednesday 15, May 2019, 16:37:14

வாங்கியக் கடனைத் திரும்பத் தராமல் தன்னைச் சாதியைச் சொலித் திட்டியதாக பொய்ப் புகார் தந்த நபருக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல்துறை விசாரணை என்ற பெயரில் தன்னை டார்ச்சர் செய்ததாகக் கூறி  ஆத்தூரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பிரேம்குமார் என்பவர் இன்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

தற்கொலைக்கு முன்பு காவல்துறையினரின் நடவடிக்கை குறித்தும், தன்னை ஏமாற்றியவர்கள் குறித்து நிதி நிறுவன அதிபர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.  தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நிதி நிறுவன அதிபரின் மகன் அரவிந்த் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரும் இவரது சகோதரர் செந்தில்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து, ஆத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அரசு அனுமதி பெற்று நடத்தி வரும் இந்த நிதி நிறுவனத்தில் ஆத்தூர் தில்லை நகர்ப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குட்டி என்கிற ராஜ்குமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார். இந்த கடனை பல முறை கேட்டும், ராஜ்குமார் திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து பிரேம்குமார் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு புகாரும் அளித்து உள்ளார்.

இந்த நிலையில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, அதனை கொடுக்காமல், தன்னை ஜாதி கூறி திட்டியதாக கூறி, கடனை பெற்ற ஆட்டோ ஓட்டுனரான ராஜ்குமார் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரினையடுத்து நிதி நிறுவன அதிபர் பிரேம்குமார் மற்றும் அவரது சகோதரர் செந்தில்குமார் ஆகியோரை அழைத்த ஆத்தூர் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜி மற்றும் ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் கேசவன் ஆகியோர், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த இருபது நாட்களாக நிதி நிறுவன அதிபரை அழைத்து விசாரணை என்ற பெயரில் மிகவும் தொல்லை கொடுத்ததோடு, ஆட்டோ ஓட்டுனரிடம் எழுதி வாங்கிய பத்திரத்தை திருப்பி கொடுக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த நிதி நிறுவன அதிபர் பிரேம்குமார், இது குறித்து தனது நண்பர்களிடம் கூறி வேதனையடைந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் உள்ள அறையில் மயக்கமடைந்து இருந்த பிரேம்குமாரை, அவரது மகன்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது செல்போனை சோதனை செய்ததில், அதில் அவர் தனது மரணத்திற்கு காரணம் குறித்து பேசிய வீடியோ இருப்பது தெரிய வந்தது.

அந்த வீடியோவில், மரணத்திற்கு முன்பு பிரேம்குமார் பேசும் போது, கடன் கொடுத்தவர் தன்னை ஏமாற்றியதோடு, தன்னை பற்றி பொய்யான புகார் அளித்து உள்ளார் என்றும், இதனை விசாரிக்காமல், தன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனக்கு மிகவும் தொல்லை கொடுத்ததாகவும், தனது மரணத்திற்கு காரணம் காவல்துறையினரே என்றும் கூறி, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து பிரேம்குமாரின் வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அவரது மகன் அரவிந்த், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன் – லைன் மூலமாக புகார் அனுப்பி உள்ளார்.

இது குறித்து உயிர் இழந்த பிரேம்குமாரின் சகோதரர் செந்தில்குமார் கூறும் போது, “ஆட்டோ ஓட்டுனர் ராஜ்குமாரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆத்தூர் காவல்துறையினர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றனர், பணம் கொடுத்த பிறகும் எங்கள் இருவருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த எனது சகோதரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார், எனது சகோதரின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டு கொண்டார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தனது சகோதரரின் உடலை வாங்க போவதில்லை என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz