புகாரை ஏற்க மறுத்த திருச்சி காவல்துறை - இணையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் பதிவு செய்த திருச்சி வழக்குரைஞர்.....

Wednesday 15, May 2019, 16:59:58

லோக்சபா தேர்தலில் வேடப்பாளர்களை களமிறக்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், ‘‘தீவிரவாதம் இரு தரப்பிலும் இருக்கிறது. எந்த மதத்தின் பெயரிலும் தீவிரவாதம் இருக்கக் கூடாது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே,’ என்று பேசியுள்ளார்.

இதையடுத்து, பா.ஜ., கட்சி உட்பட இந்து அமைப்புகள் தரப்பில் இருந்தும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க., தரப்பில் இருந்தும் பலவாறான எதிர்ப்பு கோஷங்களும் கருத்துக்களும் வெளியானது.

இது தவிர, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில், கமல்ஹாசனின் மீது இரு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ‘இந்துவை முதல் தீவிரவாதி என்ற கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்’, என்றார்.

அமைச்சர் பதவியில் இருந்தும் ஒருவரின் இந்த பேச்சே தீவிரவாதத்தை ஆதரிப்பது போல் தான் உள்ளது என்று மாற்று கருத்தாளர்கள் வாதத்தை முன் வைத்தனர்.

துாத்துக்குடியில், கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்து சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, இந்து அமைப்புகள் உருவ பொம்மை எரிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந் நிலையில், திருச்சியை சேர்ந்த கிஷோர் குமார் என்ற வக்கீல், வரம்பு மீறி பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பால்வளத்துறை அமைச்சர் என்பதை மறந்து, பேட்டை ரவுடி போல், கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என்று கூறியிருக்கிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வக்கீல் கிேஷார் குமார் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட திருச்சி காவல் அதிகாரி, காவல் ஆணையரை கலந்தாலோசித்து விட்டுத்தான் புகாருக்கு மனு இரசீது  தரப்படும் என்று கூறியுள்ளார். இதனால் அதிருதியுற்ற  வக்கீல் கிேஷார் குமார் ஆன்லைன் மூலமாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்து அதற்கான இரசீதினையும் பெற்று விட்டார்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz