ஆறு வயதில் ஆரோக்கிய நூல்கள் வெளியிட்ட பள்ளி மாணவி

Wednesday 15, May 2019, 18:22:36

திருச்சி அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினரின் மகள் கீர்த்தனா விஜயகுமார். இவர் திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றார்.

தனது தந்தை யோகா பயிற்சி செய்வதை பார்த்து சிறுவயதிலேயே யோகா பயிற்சியினை செய்து வந்தார். அடிப்படையான எளிய முறை உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம், யோகாசன பயிற்சிகள் செய்யும் கீர்த்தனா தனது தந்தையைப் பார்த்து ஆறு வயதிலேயே புத்தகம் வெளியிட வேண்டும் என கூறினார்.

எளியமுறை உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம், யோகா என மூன்று தலைப்புகளில் ஆறு வயதிலேயே மூன்று ஆரோக்கிய நூல்கள் வெளியிடப்பட்டது.

புத்தகங்களில் கீர்த்தனா செய்யக்கூடிய யோகப் பயிற்சிகள் புகைப்படத்துடன் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.பொதுவாக குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்தால் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் குழந்தைகளின் எண்ணம் சொல் செயல் ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் போது அவர்கள் லட்சியத்தை வெற்றிகரமாக அடைவார்கள் என்றனர் கீர்த்தனா பெற்றோர்கள்.

இதுகுறித்து கீர்த்தனா விஜயகுமார் பேசுகையில் அப்பா யோகா ஆசிரியர், அம்மா வழக்கறிஞர். அப்பா யோகப் பயிற்சி செய்யும் பொழுதும் யோகப் பயிற்சியளிக்கும் போதும் உடன் இருப்பேன். அவர் செய்வதை பார்த்து சிறுவயதிலேயே உடனிருந்து யோகப் பயிற்சி செய்வேன்.

அப்பா யோகப் பயிற்சி நூல்கள் பல வெளியிட்டு உள்ளார்கள். அதைப் பார்த்து நானும் யோக நூல் வெளியிட வேண்டும் என்று கூறினேன். அதன் அடிப்படையில் எனது தாய் தந்தையினர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து நூல் வெளியிட உறுதுணையாக இருந்தார்கள் என்றார்.

தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா மேலும் பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் நூல் வெளியிட ஆயத்தமாகி வருகிறார்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz