பொறியியற் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Thursday 16, May 2019, 19:43:14

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியற் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது. aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் அக்டமிக் பெர்பார்மன்ஸ் ஆப் அபிலியேட்டட் காலேஜஸ் என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடந்த 5 ஆண்டுகளுக்கான தேர்வு தரவரிசை பட்டியல்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றை பதிவிறக்கம் செய்து கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து கலந்தாய்வை எதிர்ேநாக்கியுள்ள மாணவர்கள் பொறியியற் கல்லூரியை தேர்வு செய்யலாம்.

இணைவு பெற்ற கல்லூரிகளை பொறுத்தவரை தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 481 கல்லூரிகளில் சில கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். சில கல்லூரிகளில் மொத்தமே இரட்டை இலக்க எண்ணிக்கை (100 பேருக்கும் குறைவாக) மாணவர்கள் பயின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பை எதிர்நோக்கியே மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க வருகிறார்கள். அப்படியிருக்கையில் பணி நியமனம் (கேம்பஸ் பிளேஸ்மன்ட்) அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட்டால் மட்டுமே அது பொறியியல் படிப்பில்  சேர உள்ள மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz