சேலம்: வாகன சோதனையில் குட்கா வியாபாரியின் காரில் சிக்கிய 49 லட்ச ரூபாய்!

Sunday 19, May 2019, 14:38:06

தேர்தல் நடத்தை விதிமுறை வரும் 27 ஆம் தேதி வரை அமலில் இருப்பதால், சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பறக்கும் படை அலுவலர் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர், சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் அருகே நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரினை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. சோதனையின்போது அந்தக்  காரில் இருந்த அட்டைப் பெட்டியில், துணிகளுக்கு அடியில் பணக்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து காரில் வந்த மகேந்திரகுமார் என்பவரிடத்தில் அதிகாரிகள் டம் விசாரணை மேற்கொண்டனர். தான் டீத்தூள் செய்து வரும் ஒரு மொத்த வியாபாரி என்று அதிகாரிகளிடத்தில் தெரிவித்த மகேந்திரகுமார்,  பொருட்களை வாங்குவதற்காக திருப்பதிக்கு செல்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

காரில் எடுத்து வரப்பட்ட பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் மகேந்திரகுமாரிடத்தில்  இல்லாததால், அந்தப் பணத்தைப்  பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், சேலம் கோட்டாச்சியர் செழியனிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து முறையான ஆவணம் இல்லாத 49 லட்ச ரூபாய் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை எடுத்து வந்த மகேந்திரகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் டீ தூள் மொத்த வியாபாரம் மட்டுமல்லாமல், குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் மறைமுகமாக வியாபாரம் செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்குவதற்காகவே, இந்த பணத்தை எடுத்து சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz