“எட்டு வழித் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு 7 சதவீதம் பேர் மட்டுமே” – சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Monday 20, May 2019, 22:27:12

இன்று சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள்  8 வழிச் சாலைத் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “கடந்த, 2001 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை போக்குவரத்து 300 மடங்கு  அதிகரித்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் சாலை பாதுகாப்பில் பொது மக்களின் உயிர் முக்கியம் எனக் கருதுவதாகவும் தற்போது 4 லட்சம் வாகனங்கள் பெருகியுள்ள நிலையில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும் என்பதால் வாகனங்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு 6 லட்சமாக உயரும் என்றும் அதனைக் கணக்கிட்டுத்தான் 8 வழி சாலை திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார்.

சாலைகளில் பயணிக்கும் மக்களின் நன்மை கருதி 15 வருடத்திற்கு ஒருமுறை சாலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், எட்டு வழி சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் நாட்டின் நலன் கருதி பொதுமக்களின் உயிருக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் தாங்களாகவே முன் வந்து நிலத்தை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என ஏற்கனவே உறுதி அளித்திருப்பதாகவும் ஒரு சிலர் ஏதாவது ஒரு போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz