தர்மபுரி: நக்சலைட் பாலன் நினைவு நாள் குறித்த பரப்புரையில் ஈடுபட்ட நால்வர் கைது

Monday 10, September 2018, 20:47:37

பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு  கொண்ட தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்த பாலன் என்பவரும், அவரது நண்பரான கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த  அப்பு என்பவரும் 1967ல் உருவான நக்சலைட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்தினர். இடதுசாரி தீவிரவாத எண்ணம் கொண்ட இவர்களில் அப்பு 1970ஆம் ஆண்டு போலீசாருடனான மோதலில் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு, 1980ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலன் கொல்லப்பட்டார். இவர்களின் நினைவாக இருவரது சிலைகளுடன் கூடிய  நினைவுதூண் ஒன்று தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் 1984 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பாலனது நினைவு நாளான செப்டம்பர் 12ஆம் தேதியன்று  தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் உள்ள இந்த நினைவிடத்தில் இடதுசாரிகள் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி இறந்த தங்கள் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

நாளை மறுநாள் செப்டம்பர் 12 தர்மபுரி நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அப்பு - பாலன் நினைவிடத்தில் செவ்வஞ்சலி செலுத்தக் காவல் துறையின் முறையான அனுமதியினை மா.லெ. குழுவினர் பெற்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

இந் நிலையி்ல், இன்று தர்மபுரி நகரில் பாலன் நினைவு நாள் குறித்த பரப்புரையில் ஈடுபட்ட மா.லெ. குழுவைச் சேர்ந்த சித்தானந்தம், ரமணி, பூதிப்பட்டி இராமச்சந்திரன், வேடியப்பன் ஆகியோரை தர்மபுரி போலீசார்  திடீரென இன்று கைது செய்தனர்.

முறையான அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காகவும், போஸ்டர்களை ஒட்டியதற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்படவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாலன் நினைவுநாள் நெருங்கும் நேரத்தில் நடந்துள்ள இந்தக் கைது தர்மபுரியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz