திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் பெயரால் வெளியான போலி அறிக்கை!

Tuesday 21, May 2019, 18:48:50

காங்கிரஸ் கூட்டணியின் பலத்தோடு உற்சாகமாகப் பலவித கணக்குகளைப் போட்டு இயங்கி வந்த தி.மு.க.வின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் இன்று தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரியின் பெயரால் அறிக்கை ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

அந்த அறிக்கையில் வரும் மே 23ந் தேதிக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் நடைவேற்ற பேச்சுவார்த்தையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. விரைவில் இதுகுறித்த முழுவிபரம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி அமைக்க முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் அ.ம.மு.க  பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடனும் இணைந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயன்று வருவதை அடுத்து இந்த முடிவு கனத்த இதயத்தோடு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழகக் காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அதன் தலைவர் அழகிரியின் கையெழுத்தோடு இணையதளங்களில் வெளியான இந்த அறிக்கை திமுக காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த அறிக்கை போலியான அறிக்கை என்பதை காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ முகநூல்  பக்கத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரசின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் முழு விபரம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

 

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz