சேலம்: பட்டப்பகலில் 3 வயது சிறுவனைக் கடத்தித் தப்பியோடிய முகமூடிப் பெண்கள்!

Thursday 23, May 2019, 00:03:47

சேலம் மாநகரின் மைய பகுதியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தையை இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தபடி வந்த இரண்டு இளம்பெண்கள் கடத்தி சென்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகரம் சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு பகுதியில் பாலாஜி, நித்யா தம்பதியினர் தமது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந் நிலையில் வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்று வயதுக் குழந்தை யோகேஸ்வரன் திடீரெனக் காணாமற் போய்விட்டான்.

குழந்தையைக் காணாது பதறிப் போய் பாலாஜி, நித்யா தம்பதியினர் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினர். அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றதாக அப் பகுதி மக்கள் குழந்தையின் பெற்றோரிடத்தில் தெரிவித்தனர். இதையறிந்த பெற்றோர்கள் பதறிப்போய் இதுகுறித்துப் போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகரம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகரக் காவல் துணை ஆணையர் தங்கதுரை சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டுக் காணாமற் போனக்  குழந்தையைக் கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையை முடுக்கி உள்ளார். மேலும், இந்த சாலையில் மாநகரக் காவல்துறை சார்பில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் சேலம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz