தி.மு.க.விற்கு வாக்களித்த கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகம் முடக்கம் - சேலம் தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றச்சாட்டு!

Monday 27, May 2019, 19:37:16

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபன், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை இன்று துவங்கினார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில், வீதி வீதியாக நடந்து சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வீதி வீதியாக நடந்து சென்று நன்றி தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பொது மக்கள் கூறிய குறைகளைக் கேட்டறிந்த திமுக நாடளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பார்த்திபன் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேறிஞர் அண்ணா சிலைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வரின் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றையும் மீறி திமுகவிற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், திமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த நாள் முதல் இன்று வரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை முடக்கி வைத்து உள்ளதாகவும், குறிப்பாக திமுகவிற்கு வாக்களித்த பல பகுதியில் குடிநீர் விநியோகத்தை வேண்டுமென்ற நிறுத்தி வைத்து மலிவான அரசியலை முன்வைத்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னையை சரி செய்திட வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுகவின் தலைமையின் அனுமதி பெற்று மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனுடன்  சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன்,  சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, சேலம் மாநகரச் செயலாளர் ஜெயகுமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள உடன் இருந்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz