தொடரும் எட்டு வழிச் சாலைத் திட்டம்: தேர்தல் தோல்வியால் பழிவாங்கத் துடிப்பதாக அதிமுக அரசு மீது விவசாயிகள் குற்றசாட்டு....  

Tuesday 28, May 2019, 18:07:32

சேலம் – சென்னை இடையில் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட எட்டு வழி சாலை திட்டத்திற்கு சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு வழிச் சாலைத் திட்டம் தொடர்பான அரசாணையை இரத்து செய்தததோடு, விவசாய நிலங்களை அழித்துக் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தது. மேலும் இந்த திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து கைப்பற்ற நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவித்து இருந்தது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன், எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு கொடுத்து உள்ளதாகவும், இந்தத் திட்டம் தடையின்றி நிறைவேற்றப்படும் என்று உறுதிப்பட கூறினார்.

தமிழக அமைச்சரின் இந்த கருத்திற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும், எட்டு வழி சாலை துவங்கும் பகுதியான சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் ஓன்று திரண்ட, பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள், விளைநிலத்தில் கருப்பு கொடி ஏந்தியபடி தமிழக அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும்  நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தொடர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய விவசாயிகள், தேர்தலில் தோல்வி அடைந்ததால், விவசாயிகளைப் பழிவாங்க அதிமுக அரசு துடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தால் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி விவசாய நிலங்களை அழித்து,  இந்த திட்டத்தை நிறைவேற்றிட முயற்சித்தால் வரும் தேர்தலும் தக்க பதிலடி கொடுப்போம் என்றும், அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதபடி விவசாயிகளின் பணி இருக்கும் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

மேலும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்துவதாக கூறும் அரசு, சேலம் – சென்னை வழியிலான தற்போது உள்ள நான்கு வழி சாலையில் பல இடங்களில் இரு வழி சாலையாகவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற வினாவை எழுப்புகின்றனர்.

வளர்ச்சிக்காகவே இந்தத் திட்டம் செயல்படுத்தபடுவதாக கூறும் அரசு, நான்கு வழிச் சாலையினால் வந்த வளர்ச்சி என்ன என்பதனை தெரிவிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்திட விட மாட்டோம் என்றும், உயிர் உள்ளவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz