புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

Tuesday 28, May 2019, 18:26:32

இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமி, தன்னிடம் கேள்வி கேட்ட நிருபர் ஒருவரை ஒருமையில் மரியாதையின்றிப் பேசியதோடல்லாமல் அவரிடம் " நீ எந்த ஊர்? என்ன ஜாதி? என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (28-05-2019) செவ்வாய்க்கிழமை காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , " நீ எந்த ஊர்? என்ன ஜாதி? " என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.

மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்  என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

ஜாதி மொழி மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல; அருவறுக்கத்தக்கதும் கூட.

சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பத்திரிகையாளர் என்ற  அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும்,  ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz