ஏற்காடு: சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமடைந்த கண்ணாடி மாளிகை!

Thursday 30, May 2019, 17:35:14

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஏற்காடும் ஒன்று. வழக்கமாக குளுகுளுவென்ற தட்ப வெப்ப நிலையில் இருக்கும் ஏற்காட்டில் கடந்த  சில வாரங்களாக கடும் வெயில் தாக்கியது.

கோடை விடுமுறை என்பதால் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து சென்றனர்.

வீயிளிந்தாக்கம் குறைந்து ஏற்காட்டில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் ஏற்காட்டில் பரவலாக மழை பெய்தது.பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை இரவு 10 மணி வரை தொடர்ந்து பெய்தது.

சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக ஒண்டிக்கடை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளை முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்வயர்கள் அருபட்டதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக  ஏற்காடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஏற்காடு அண்ணா பூங்கா அருகில் கண்ணாடி மாளிகை உள்ளது. இந்த கண்ணாடி மாளிகையில் கோடை விழா நாட்களில் காய்கறிகளால் உருவங்கள் செய்து வைக்கப்பட்டு இருக்கும். நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது மரம் முறிந்து கண்ணாடி மாளிகை மீது விழுந்தது. இதில் அந்த மாளிகையில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. நேற்று காலையில் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் வயர்களை சீரமைத்தனர். இதையடுத்து மின்சாரம் வழங்கப்பட்டது.

கோடைவிழா ஏற்காட்டில் தொடங்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் அதன் முன்னேற்பாடாக அழகுபடுத்தப்பட்ட கண்ணாடி மாளிகை மரம் முறிந்து விழுந்ததன் காரணமாகச் சேதமடைந்தது. அதனை விரைந்து செப்பனிடும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz