சேலம்: 44-வது கோடைவிழா மலர்க் கண்காட்சி இன்று ஏற்காட்டில் தொடங்கியது!

Friday 31, May 2019, 20:03:03

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் சீசன் தொடங்கும் சமயத்தில் அந்தக் குளுமையை அனுபவிப்பதற்காக தமிழகம் முழுவதுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

ஏற்காட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ப்பதற்காக பல்வேறு கலைநிகழ்சிகள், ஏற்காடு மலைவாழ்மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் கொண்டதான கோடைவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சுமார் ஒரு வாரம் வரையில் ஏற்காட்டில் நடத்தப்படுவது வழக்கம்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு இணையாக ஏற்காட்டிலும் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வரத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டுக்கு பெரும் விருப்பத்துடன் கோடைவிழாவுக்கு வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் ஏற்காடு கோடைவிழா இந்த ஆண்டு மிகத் தாமதமாக மே31ந்தேதியில் தொடங்கி ஜூன் 1 மற்றும் 2ந்தேதி ஆகிய மூன்று நாட்களில் மட்டும் நடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது.

கோடைவிடுமுறையைக் குஷியுடன் கழிப்பதற்காக நடக்கும் கோடைவிழாக் கொண்டாட்டங்கள் கோடைவிடுமுறை முடிந்தபிறகு தொடங்கப்படுவதாக அதுவும் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு ஏற்காடு கோடைவிழாவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

இன்று ஏற்காட்டில் தொடங்கிய 44-வது கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியினை சேலம் ஆட்சியர் ரோகிணி முன்னிலையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி வருகிற ஜூன் 2ந் தேதி வரையில் கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி நடக்க உள்ளது. 

44-வது கோடைவிழா மலர்க் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில், மேரிகோல்டு, ஜினியா, ஸ்னாப் ட்ராகன், கேலண்டுல்லா, ஆஸ்டர், டையான்தஸ் ஸ்வீட், சால்வியா, கோம்பரனா, செலோசியா கிரிஸ்ட், அல்லீசம் ஈஸ்டர், பெட்டூனியா, பான்சி, பாஸ்சம் டோம், கைலார்டியா மேசா, காஸ்மாஸ் சொனாட்டா உள்ளிட்ட 21 வகையிலான 10 ஆயிரம் பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

"முன்பெல்லாம் மே மாதம் இரண்டாம் வாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரையில் எட்டு நாட்கள் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்கள் குறைக்கப்பட்டு இப்போது வெறும் மூன்று நாட்களில் வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு லீவு முடிந்து பள்ளிக்கூடம்  திறக்கப்போற நேரத்தில் கோடைவிழா என்றால் எல்லோருக்கும் சிரமந்தான். நிறையப் பேரால் வரமுடியாது. கொஞ்சம் முன்பாக வழக்கமான தேதியிலேயே விழா நடத்தப்பட்டிருந்தால் எல்லோருக்கும் வசதியாக இருந்திருக்கும். அதே போல, ஏற்காட்டில் இருக்கிற தண்ணீர்ப் பஞ்சத்தையும் விழா ஏற்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டும்" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த ரமேஷ்.

"கோடைவிழாவுக்கு வரப் போகிற கூட்டத்தை நம்பியே எங்கள் பிழைப்பு நடக்கும். சாதாரணமாக இப்போ இருக்கிற கூட்டம் கூட இந்த வருடம் கோடைவிழா சமயத்தில் இருக்குமாங்கிறது சந்தேகந்தான். ஏற்காட்டில் கோடைவிழா நடக்கிறதுங்கிற செய்தியையே நாங்கள் பேப்பர் மூலமாத்தான் தெரிஞ்சிகிட்டோம்.

இந்த வருடம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்படவிருக்கிற கோடைவிழாவால் எங்களுக்கும் எந்தப் பயனும் இருக்கப் போறதில்லை; பொதுமக்களுக்கும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை" என்கின்றனர் ஏற்காடு எரி அருகே கடைகளை வைத்துள்ள சிறு வணிகர்கள்.

அவசரகதியில் ஏற்பாடுகள செய்யப்பட்டு நடத்தப்பட்டாலுமே கூட ஏற்காடு கோடைவிழாவுக்கு மக்கள் கூட்டம் அலைமொதத்தான் செய்கிறது. சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் திரளாகக் குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, பக்கோடா பாய்ணட், லேடீஸ் சீட் மற்றும் ஜென்ஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்தனர். அவர்கள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

 

    

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz