எட்டுவழிச் சாலைத் திட்டம்: விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததற்கு விவசாயிகள் கடும் கண்டனம்!

Monday 03, June 2019, 19:30:18

சேலம் – சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளது. விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல், விவசாயத்தை அழித்திட முயற்சி மேற்கொள்ளும் மத்திய மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் மேல் முறையீடு செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட விவசாயிகள் நேற்று பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தியபடி போராட்த்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் அருகே ஓன்று திரண்ட உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் என்ற விவசாய அமைப்பினர், கருப்பு கொடி ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளை அழித்து எட்டு வழி சாலை திட்டம் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விவசாயிகளின் உணர்வை மதித்து மேல்முறையிட்டை திருப்ப பெற வேண்டும் என்றும் வலியுருத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, தமிழகத்தில் தொடர்ந்து விவசாய நிலங்களை அழித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு துடித்து கொண்டு உள்ளதாகவும், இதற்கு மாநில அரசான அதிமுக அரசு உதவியாக இருந்து வருவதாகவும் கூறிய அவர்கள், விவசாயத்தை பாதிப்பதாக கூறி குஜராத்தில் இந்த திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு, தமிழகத்தில் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்திட தீவிரம் காட்டி வருவது ஏன் என்றும், தேர்தலில் பாஜகவிற்கு தோல்வியை கொடுத்த மாநிலம் என்பதால், வாக்கு எண்ணிக்கை முடிந்த சில நாட்களிலேயே இந்த மேல் முறையீட்டை செய்து தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதே போன்று விவசாயத்தை அழித்து கொண்டே இருப்பதினால் தமிழகம் சோமாலியா நாடு போன்று மாறி விடும் என்றும், தமிழக மக்கள் அகதிகளாக பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்த்தில் ஈடுபட உள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz