வங்கியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க முடிவு

Tuesday 11, June 2019, 00:36:35

வங்கியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரம் வருமாறு;

டில்லி- கருப்பு பண பதுக்கலை ஒழிக்கும் முயற்சியாக, ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கியிலிருந்து ஆண்டுக்கு ரொக்கமாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் எடுப்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.10 லட்சத்திற்கு மேல் அனைத்து தரப்பும் பணபரிவர்த்தனையில் ஈடுபட போவதில்லை. குறிப்பிட்ட சில தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.10 லட்சமோஅல்லது அதற்கு மேலோ பண பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள்.அதனால் அரசின் இந்த புதிய வரி விதிக்கும் முடிவு, நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பால் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை இன்னும் அதிககரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் வெளியாகியுள்ள தகவல்களாவன: கடந்த சில ஆண்டுகளாகவே ரூபாய் நோட்டு பரிவர்த்தனையை குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. காகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணபரிவர்த்தனைகளிலும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல அதிக தொகையை பரிவர்த்தனை செய்யும் போது, ஆதார் எண்ணை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிதாக விதக்கப்பட உள்ள வரி மூலம், தனி நபர்களின் பண பரிவர்த்தனையை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் அவர்களின் வருமான வரி தாக்கல் கணக்கின் உண்மை தன்மையை கண்டறியவும் இது பயன்படும் என டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.

இது தவிர ரூ.50,000-க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய பான் கார்டை கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைகளால் வருமான வரி தாக்கலின் போது, பரிவர்த்தனை விவரங்களை எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடியும் என்பதும் மத்திய அரசின் திட்டமாகும்.

வரும் ஜூலை 5-ம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz