திருச்சி மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறும்பட போட்டி

Tuesday 11, June 2019, 01:01:43

திருச்சி மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்வட்ச் சர்வேக்சன் 2020க்கான திடக்கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் உருவாக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, திருச்சி மாநகராட்சி www.cleantrichy.com/contest என்ற இணையதள முகவரியில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறும்படம் விழிப்புணர்வு படைப்புகளுக்கு வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரித்தல், குப்பை கழிவுகள் இல்லா வீடு, குப்பை கழிவுகள் இல்லா திருச்சி, பிளாஸ்டிக் இல்லா திருச்சி, எனது திருச்சி எனது கடமை , மாடி தோட்டம் அமைத்தல், ஒரு வீட்டுக்கு ஒரு மரம் என்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் குறும்படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 1ம் தேதி கடைசியாகும். மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் படைப்புகளை உருவாக்கி போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த போட்டிகளில் பங்கேற்பவர்கள், இந்த திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்தி அதனை குறும்படமாக எடுத்து பதிவிட்டால் அதற்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளித்து தாங்கள் செயல்படுத்திடும் திட்டங்களை குறும்படமாக அமைத்து இந்த பரிசுப்போட்டியில் பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறும்படம் படைப்புகளுக்கு தனித்தனியே முதல் 3 இடங்களுக்கு சிறந்த படைப்புகளை தேர்வு செய்யப்பட உள்ளது. முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், மேலும், ஆறுதல் பரிசாக 10 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz