பிரபல நாடக ஆசிரியர், நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

Tuesday 11, June 2019, 01:14:23

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், வசனகர்த்தாவும், திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி நேற்று மதியம் காலமானார்.

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேசி மோகன், 1979ல் கிரேசி கிரியேசன்ஸ் என்ற பெயரில் நாடக கம்பெனி துவங்கி அதன்மூலம் நிறைய நாடகங்களை நடத்தி வந்தார். இதோடு மட்டுமல்லாது, சின்னத்திரை நாடகங்களுக்கும் வசனம் எழுதி வந்தார். 30 நாடகங்கள், 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

பொறியியல் பட்டதாரியான கிரேசி மோகன், கிண்டி பொறியியல் கல்லூரியில், 1972-ம் ஆண்டு நடந்த கல்லூரிகளுக்கிடையேயான நாடக போட்டியில், இவரின் வசனத்திலான கிரேட் பேங்க் ரோப்பரி நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதை, நடிகர் கமல்ஹாசனிடமிருந்து கிரேசி மோகன் அப்போது பெற்றார்.

இவரது வசனத்திலான 30க்கும் மேற்பட்ட நாடகங்கள், இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் 6,500க்கும் மேற்பட்ட முறை மக்களுக்காக நடத்தப்பட்டுள்ளன. இவரின் படைப்பான சாக்லேட் கிருஷ்ணா, நாடகம், 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்டுள்ளது.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம், சினிமாவில் வசனகர்த்தாவாக கிரேசி மோகன் அறிமுகம் ஆனார். நடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த நட்பால், சதிலீலாவதி, காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது நடிக்கவும் செய்தார்.
இவரது கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தமிழ் இலக்கியம், நாடகம் உள்ளிட்ட துறைகளில் இவரின் 38 ஆண்டுகள் சேவையை பாராட்டி, அமெரிக்காவின் மேரிலாண்ட் கவர்னர் Professinal excellence விருது வழங்கி கவுரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz