திருச்சி: விளையாட்டு விடுதியில் பயின்று பதக்கம் வென்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Tuesday 11, June 2019, 01:21:03

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு ரூபாய் 4,00,000 த்திற்கான காசோலையினையும், திருச்சி விளையாட்டு விடுதியில் பயின்று பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு பத்திரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறையூர் வட்டம், கோட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 30.5.2019 அன்று சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையின் போது ஆடு மேய்ப்பதற்கு சென்ற செல்லதுரை என்பவரின் மனைவி திருமதி.செல்வி (வயது 32) பாழடைந்த மண் சுவற்றினால் ஆன கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் இறந்ததையடுத்து, அவரின் கணவரும் வாரிசுதாரருமான திரு.செல்லதுரை என்பவருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4,00,000த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

திருச்சி விளையாட்டு விடுதியில் பயின்று மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 2 தங்கம், 1 வெண்கலமும், சௌத்ஜோன் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கமும் நீச்சல் போட்டியில்; 2 தங்கம், 2 வெள்ளி பதக்கமும், இறகுப்பந்து போட்டியில் 2 தங்கமும் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு பாராட்டி வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 185 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 3 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 53 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் பணி மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 12 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 20 மனுக்களும், புகார் தொடர்பான 17 மனுக்களும், கல்வி உதவி தொகை வங்கி கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 4 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி, தொடர்பாக 01 மனுவும், என பல்வேறு கோரிக்கை தொடர்பாக 295 மனுக்களும், இதர மனுக்கள் 231 என மொத்தம் 526 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz