கலைஞரின் நண்பர் அன்பிலார் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

Tuesday 11, June 2019, 01:26:43

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான அன்பிலாரின் சிலையை திமுக தலைவரும், தமிழக எதிர் கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அன்பில் கிராமத்தில் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சியை அடுத்த லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் திருச்சி தொழிலதிபர் மறைந்த வி.கே.என். அவர்களால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்பிலார் சிலை வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அன்பிலாரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருவரம்பூர் எம்.எல்.ஏவாக இருக்கும் அன்பிலாரின் பேரன் அன்பில் மகேஷ் கடந்த காலத்தில் நிறுவப்பட்ட சிலையை அகற்றிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அன்பில் தர்மலிங்கத்தின் ஏழரை அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை தயார் செய்தார்.

anbilar1

இந்நிலையில் நாடாளுமன்றத்தேர்தலில் திமுக கூட்டணி மெகா வெற்றி பெற்றதற்காக நன்றி அறிவிப்பு கூட்டமும், கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் சிலை திறப்பு விழாவுக்கும் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலந்துக்கொள்ள இன்று காலை 10.50 மணி போல் திருச்சி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லால்குடி அன்பில் கிராமத்திற்கு சென்றார்.

திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட திமுக சார்பில் ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அன்பில் சென்ற மு.க.ஸ்டாலின் கலைஞரின் நெருங்கிய நண்பரும், தனது நண்பரின் தந்தையுமான அன்பிலாரின் சிலையை திறந்து வைத்து மலர்தூவி வணங்கினார். 

மு.க.ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளியிலான திமுக கொடிக்கம்பத்தை கொடுத்து அசத்தினார்.   திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், அன்பிலார் செயல் வீரராக, தளபதியாக விளங்கியவர். திமுக மட்டுமல்ல அனைத்து கட்சியினருக்கும் தலைவராக இருந்தார். திருச்சி மாவட்டம் தீரர்களின் மாவட்டமாக மாற்ற காரணமானவர் அன்பிலார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும், விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற உறுதி ஏற்போம். அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு வருகின்றோம் என பேசினார்.

பேசி முடித்தவுடன் சிலை அருகே சென்று சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மறைந்த அமைச்சர் அன்பில்தர்மலிங்கம் நூற்றாண்டு மலர் புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.

anbilar4

சிலை திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சேடப்பட்டி முத்தையா, எம்.பி திருச்சி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிலை திறப்பின்போது கருப்பு சிவப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz