எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றக் காட்டும் அவசரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரிநீர்ப்  பிரச்னையில் காட்டாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி...

Tuesday 11, June 2019, 19:19:31

எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற காட்டும் அவசரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரிநீர்ப்  பிரச்னையில் காட்டாதது ஏன் என்று திமுக சார்பில்  திருச்சியில் நடந்த வாக்காளர் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நேற்று இரவு கருணாநிதி 96-வது பிறந்த நாள் விழா, நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதற்காக வாக்காளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-\

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளையும், அன்பில் கிராமத்தில் மறைந்த தி.மு.க. முன்னோடி அன்பில் தர்மலிங்கம் சிலையையும் திறந்து வைத்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி தி.மு.க.வின் பாடிவீடு என அண்ணா அடிக்கடி கூறுவார். தீரர்கள் நிறைந்த திருச்சியில் பல மாநாடுகள் நடத்தப்பட்டு இருக்கிறது.

கருணாநிதி மறைந்து விட்டாலும் அவர் நமது மனதோடு, ஊனோடு, உயிரோடு கலந்து நம்மை இயக்கி கொண்டிருக்கிறார். அவர் தந்த பயிற்சியால் தான் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறோம். இந்த வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல, கருணாநிதியின் பிள்ளைகளாகவும் பேரன்களாகவும் இருக்கும் தொண்டர்களாகிய நீங்கள் தான் காரணம். இந்த வெற்றியை அடுத்து வர இருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்கான சூளுரையை இந்த கூட்டத்தில் ஏற்கவேண்டும்.

1957-ம் ஆண்டு அண்ணா, தம்பிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து ஒரு கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நாட்டின் மன்னன் முன்பாக ஒரு குருவி ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு விளையாடிக்கொண்டு இருக்கும். மன்னன் அந்த குருவியிடம் நாணயத்தை என்னிடம் கொடு என கேட்பான். உடனே மன்னனிடம் நாணயத்தை கொடுத்த குருவி இந்த நாட்டின் மன்னனே என்னிடம் கடன் வாங்கி விட்டான் என கூறும்.

sta5

குருவியின் செயலால் கோபம் அடைந்த மன்னன் அந்த நாணயத்தை குருவியிடம் திரும்ப கொடுத்து விடுவான். உடனே அந்த குருவி எனக்கு பயந்து மன்னனே நாணயத்தை என்னிடம் தந்து விட்டான் என குறை கூறும்.

இப்படித்தான் இன்று நாட்டில் ஒவ்வொரு செயலுக்கும் குறை கூறிக்கொண்டிருக்கிறது, ஒரு கூட்டம். அந்த கூட்டம் சொல்கிறது நாம் பெற்றது வெற்றி இல்லையாம், பொய் பிரசாரம் செய்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோமாம். அப்படியானால் அகில இந்திய அளவில் மோடி பெற்றதும் வெற்றி இல்லையா? தமிழகத்தில் 38 எம்.பி.க்கள் வெற்றி பெற்று என்ன பயன்?

அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என கேட்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டம் தொடங்கட்டும் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அப்போது தெரியும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.பி.க்களை போல் கூனி குறுகி ஜடம்போல் இருக்க மாட்டார்கள்.

உறவுக்கு கைகொடுப்பதோடு, உரிமைக்கு குரல் கொடுப்பார்கள். நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தி திணிப்பை விரட்டி அடித்து இருக்கிறோம். தி.மு.க. காட்டிய எதிர்ப்பினால் தான் மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்று இருக்கிறது.


சமீபத்தில் காவிரி ஆணைய கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது. அந்த கூட்டத்தில் காவிரி நீரை திறந்து விடுவது பற்றி பேசாமல் மேகதாதுவில் அணை கட்டுவது பற்றி பேசப்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி சதானந்த கவுடா, கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். எனவே காவிரி ஆணையமா? கர்நாடக ஆணையமா என கேட்க தோன்றுகிறது.

தமிழகத்தில் பாரதீய ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோற்ற காரணத்தினால் தமிழகத்தை சுத்தமாக முடித்து விடலாம் என நினைத்து விட்டார்களா? என தெரியவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை. கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெறுவதற்கும், மேட்டூர் அணையை திறப்பது பற்றியும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. கர்நாடக முதல்-மந்திரியை வலியுறுத்தவில்லை, கடிதம் எழுதவில்லை.

அதிகாரிகளை அனுப்பி விவாதமும் நடத்தவில்லை. அவரது கவலை எல்லாம் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது. எட்டுவழிச்சாலை திட்டத்தில் காட்டக்கூடிய அவசரம், ஆர்வத்தை மேட்டூர் அணையை திறப்பதில் காட்டவில்லை.

இதற்கு காரணம் என்ன? எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் ரூ.3 ஆயிரம் கோடி கமிஷன் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். பணத்தை தவிர எந்த லட்சியமும், சித்தாந்தமும் இல்லாத ஒரு சர்வாதிகார ஆட்சி, எடுபிடி ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி மக்களை சமாதானம் செய்து எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறி இருக்கிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் 12-ந்தேதி விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க. தோழமை கட்சியினரும் இதில் பங்கேற்பார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்காத அ.தி.மு.க.விற்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோன்ற ஒரு மரண அடியை வர இருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர் என மு.க. ஸ்டாலின் பேசினார்.

sta1

இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம், கரூர் எம்.பி. ஜோதிமணி, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பெரம்பலூர் எம்.பி. ஐஜேகே பாரிவேந்தர், இவர்களோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திருவாரூர் பூண்டிகலைவாணன், அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சை நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து மகிழ்ந்தார். இந்த கூட்டத்தில் காதர்மொய்தீன், ஐ.பெரியசாமி, உதயநிதிஸ்டாலின், சபரீசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz