ஜூன் 17-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - இந்திய மருத்துவர் சங்கம் அறிவிப்பு.

Saturday 15, June 2019, 18:05:01

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில், என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஷாகித் என்பவர் கடந்த திங்கள் கிழமை உயிரிழந்தார்.

இதற்கு மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என கூறி அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பரிபாஹா முகோபாத்யா என்ற மருத்துவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வருகிறார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3வது நாளாக நேற்றும் நீடித்தது. அவர்கள் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்காத அரசு போராட்டத்தினைக்  கை விட்டு விட்டு பணிக்குத்  திரும்பும்படி  அவர்களிடம் கூறி வருகிறது.

இதனிடையே, மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வரும் 17-ம் தேதி அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைகிறது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz