சேலம்: தலைவாசல் -ஆத்தூரில் இரண்டு நாட்களில் இருவர் கடத்தல்!

Wednesday 19, June 2019, 17:46:12

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள மும்முடியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் கொம்பாட்டி மணி. திருமணமாகி விட்ட போதிலும் கருத்து வேறுபாடுகள காரணமாக  மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.  

கடந்த 17ந் தேதியன்று காலை 8.50 மணிக்கு தலைவாசல் அருகே சம்பேரி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கொம்பாட்டி மணியை அந்த வழியாக கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள்  அவரை வலுக்கட்டாயமாக காரில் இழுத்து ஏற்றிக் கடத்தி சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்துப் பதறிப்போன அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து நிதி நிறுவன அதிபரின் தம்பி துரைராஜ் (55), தனது அண்ணன் கொம்பாட்டி மணியை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாக தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொம்பாட்டி மணியையும், அவரை கடத்தி சென்ற மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கு முன்னரே அடுத்ததாக ஒரு ஆள் கடத்தல் ஆத்தூரில் அதற்கடுத்த நாளான 18ந் தேதியன்று நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதிபுரம் மின்வாரிய பவர் ஹவுஸ் எதிரில் வசிக்கும் ராஜமாணிக்கம். மல்லியக்கரை பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். தொழில் அதிபரான இவருக்குக் கர்நாடக மாநிலம் பெல்காமில் கிரானைட் குவாரியும் ள்ளது.

இவருடைய ஒரே மகனான சுரேஷ்குமார் ஆத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மல்லியகரையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு நேற்று மாலையில் காரில் சென்றார். ஆத்தூர் அருகே மோட்டூர் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் அருகே சுரேஷ்குமார் சென்ற காரை வேறு ஒரு கார் வழிமறித்து நிறுத்தியது.

அந்தக் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாருடன் சத்தமிட்டுப் பேசியபடி காருக்கு வெளிய வெளியே வரும்படி அழைத்தனர். மறுத்த சுரேஷ்குமாரை அடித்து உதைத்து, இழுத்துப் போட்டுத் தங்களது காரில் அந்த கும்பல் கடத்திச் சென்றது.

இது குறித்த தகவலின் பேரில் மல்லியக்கரை போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது, பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பு நிற காரில் ஒரு கும்பல் மதியம் 12 மணியளவில் வந்ததாகவும், அவர்கள் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு, சுரேஷ்குமாரின் வீட்டை உளவு பார்த்ததும் தெரியவந்தது. மேலும் சுரேஷ்குமார் காரில் சென்றதை பார்த்து பின்தொடர்ந்து சென்றதும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ்குமாரை கடத்தி சென்ற கார் சேலம் நோக்கி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை கடத்திச்சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தலைவாசல் பகுதியில் நேற்றுமுன்தினம் கொம்பாட்டி மணி என்ற தொழில் அதிபர் கடத்தப்பட்ட நிலையில், நேற்று சுரேஷ்குமார் கடத்தப்பட்டது ஆத்தூர், தலைவாசல் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தப்பட்ட இவர்கள் இருவரும் தொழில் முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டனரா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது தகராறு ஏற்பட்டதன் காரணமாகக் கடத்தப்பட்டனரா? இருவரையும் ஒரே கும்பல்தான் கடத்தியதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தலைவாசல் – ஆத்தூர் பகுதிகளில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz