திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நடைபாதைக்கடை வியாபாரிகள்

Thursday 20, June 2019, 19:10:50

திருச்சியின் மிக முக்கிய வர்த்தக சாலைகளாக கருதப்படும் சத்திரம்பேருந்து நிலையம், மெயின்கார்டுகேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி.ரோடு, நந்திகோயில் தெரு, பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தெருவோரக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் பல ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பிடித்த காரணத்தினால் மேலும் மாநகரை அழகுபடுத்தும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய தெருக்களில் உள்ள தெருவோரக் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

crs

தெருக்கடைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தடையை மீறி கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அலுவலக வாசலில் வியாபாரிகள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனயடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச்சென்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz