தங்க மங்கை கோமதிக்கு இருசக்கர வாகனம் வழங்கிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

Thursday 20, June 2019, 19:15:16

கத்தார் நாட்டில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் பெற்றார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்நிலையில் கோமதிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் இருசக்கர வாகனம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமதிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு இருசக்கர வாகனத்தின் சாவியை வழங்கினார்.

இதனை தொடர்ந்து வீராங்கனை கோமதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும்போது தெரிவித்ததாவது:

"நான் தடகள பயிற்சி எடுத்த கால கட்டத்தில் என்னிடம் இருசக்கர வாகனம் கூட இல்லை. தற்போது எனக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இரு சக்கர வாகனம் தந்து இருக்கிறார்கள். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிய தடகள போட்டியில் நான் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். கடுமையான பயிற்சியின் மூலம் மட்டுமே ஆசிய போட்டியில் வெற்றி பெற்றேன்.

vse

நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக எடுக்கப்பட்ட ‘பி சாம்பிள்’ முடிவு ஆவணம் இன்னும் வழங்கப்படவில்லை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை நிரூபித்துக்காட்டுவேன். 100 சதவீதம் நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். 

இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு வருகிற செப்டம்பர் மாதம் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி அடைந்து ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் பெற்று நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்" என பேசினார்.

நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், சின்னச்சாமி, கந்தன், கே.எம்.எஸ்.ஹக்கீம் உள்பட மாநில துணை தலைவர்கள், மாவட்ட பொருளாளர் தங்கராஜ், இளைஞர் அணி அப்துல் ஹக்கீம், அலுவலக செயலாளர் டோல்கேட் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz