சேலம்: வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை செய்த தண்ணீர் லாரிகளைச் சிறைப்பிடித்துப் பொதுமக்கள் போராட்டம்!

Thursday 20, June 2019, 19:26:00

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக கிராம பகுதியில் போதிய நீர் இல்லாத காரணத்தினால், அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம் ருகே உள்ள அழகுசமுத்திரம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து வணிக நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் விற்பனை செய்வதை கண்டித்து, லாரிகளை சிறைப்பிடித்து பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள அழகுசமுத்திரம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலமாக கிடைக்கும் நீரை, லாரிகள் மூலமாக வெளியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்து வந்தனர்.

ஆழ்துளை கிணறு அமைத்ததால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, அங்கு உள்ள கிணறுகள் வற்றியதால், தண்ணீர் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதற்கு காரணமான தண்ணீர் விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், தொடர்ந்து இரவு பகலாக லாரிகள் மூலமாக தொடர்ந்து விற்பனை நடந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், இன்று காலை ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொண்டு சென்ற இரண்டு லாரிகளை சிறைப்பிடித்து, லாரியின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் லாரிகள் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள், தண்ணீர் விற்பனையை தடுக்காத மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரப்பரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பொது மக்களை சாமதானம் செய்து, தண்ணீர் எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன் மூலமாக கிடைக்கும் நீரை, சேலத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், ஆனால் உள்ளுரில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு எந்த வித உதவியும் செய்திடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலையில், ஆழ்துளை கிணறு அமைத்து விற்பனை செய்வதை தடுக்க கோரி பல முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததற்கு பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வணிகரீதியான தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிணறுகள் வறண்டு இருப்பதாகவும் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைப்பதினால், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கிணறுகள் வற்றி உள்ளதாகவும் இதன் காரணமாக விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தண்ணீர் விற்பனையை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டத்திலும், மறியலிலும் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz