உறையூர் : விவிட் பள்ளியில் விதை விநாயகர் உற்சாகம்

Wednesday 12, September 2018, 22:26:44

திருச்சி உறையூர் ராமலிங்கநகர் விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் புதிய முயற்சியாக விதை விநாயகர் சதுர்த்தி விழாவினை உற்சாகமாக இன்று கொண்டாடினர்.

புவி வெப்பமடைவதைத் தடுக்க, மழை வளம் பெற, மரம், செடிகள் அதிகம் வளர வேண்டியது அவசியம். பள்ளி-கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், குடும்ப விழாக்கள் போன்ற பல்வேறு  விழாக்களில் இயற்கையைப் போற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களுடன் செடிகள், மரக் கன்றுகள் போன்றவை கொடுக்கப்பட்டு  வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

அதேபோல், பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் உதவியுடன் விதைப்பந்துகளை தயாரித்து வயல் வெளிகளிலும், ஆற்றங்கரைகளிலும், சமவெளிகளிலும் தூவி வருகின்றனர். இப்படித் தூவப்படும் விதைகள் மழைக்காலங்களில் நீர் கிடைக்கப்பெற்றபின் தாமாகவே முளைத்தெழுந்து செடிகளாகி, மரங்களாக வளர்ந்து பின் அவை வனங்களாக மாறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு இன்று செப்டம்பர் 12ந் தேதி  திருச்சி உறையூர் ராமலிங்கநகர் விவிட் மாண்டசரி மழலையர் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்கையை நேசிக்கும் சிந்தனையையும், முன்னோர்களால் வழி வழியாக நடத்தப்பட்டு வரும் விழாக்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையிலான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

களி மண்ணைக் கொண்டு மழலையர்தம் பிஞ்சுக் கரங்களால் விநாயகரை வடிவமைக்க வைத்து, அந்த விநாயகர் சிலைகளில் வெண்டை, பாகற்காய், அவரை, கீரை வகைகளின் விதைகள், வெள்ளரிப் பிஞ்சுகளின் விதைகளைப் பதிக்கச் செய்கின்றனர். பின்னர் அவற்றை  மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்தனுப்பி அவர்களின் பெற்றோர்களும் தத்தம் இல்லங்களில் மரம், செடி கொடிகளின் விதைகளை விதைக்கும் விழிப்புணர்வினைப் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், இந்த விநாயகர் உருவங்களை வடிவமைத்தது மழலையர்கள் மனதில் பெரும் மகிழ்ச்சியும், அவர்களது பொற்றோர்கள் மனதில் விழிப்புணர்வையும் உச்சமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்த விநாயகர் சிலைகளைத் தத்தம் வீடுகளிலேயே சிறிய டப்பாக்கள், மண் பாண்டங்களில் வைத்து 3-வது நாள் கரைத்து, அதனுடன் சிறிதளவு மண்ணையும் சேர்த்து விட்டால் வெகு விரைவில் இந்த விநாயகர்கள் செடியாய், கொடியாய், மரமாய் இல்லங்களை அலங்கரிப்பார்கள் என்றும் பள்ளி நிர்வாகிகள் பூரிப்புடன் கூறுகின்றனர்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவிட் பள்ளியின் தாளாளர் கமலசரஸ்வதி, முதல்வர் கல்பனா பாலாஜி, ஆசிரியை ஜாஸ்மின் மற்றும் அலுவலக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz