தி.மு.க.வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்!

Friday 28, June 2019, 21:42:49

அ.ம.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் அக் கட்சியில் இருந்து விலகி,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைந்தார்..! இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி செல்வேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.முக. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு தேனி மாவட்ட அ.ம.மு.க.வில் இருந்து விலகிய தன்னுடைய ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். 

மு.க.ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்திய அவர் தி.மு.க.வில் இணைந்தார். இதன் மூலம் டிடிவி தினகரனை ஆதரித்ததால் பதவியிழந்த எம்.எல்.ஏ.க்களில் கரூர் செந்தில் பாலாஜியினைத் தொடர்ந்து மேலும் ஒருவராக தங்க தமிழ்ச்செல்வனும் தன்னை இன்று தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

“தி.மு.க தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் தி.மு.க.வில் இணைந்துள்ளேன். அ.தி.மு.க.வில் இருந்த பலரும் தி.மு.க. வந்த பின், அவர்களுக்கு தி.மு.க. நல்லதே செய்துள்ளது.

ஆளுமை மிக்க தலைவர் ஸ்டாலின்; துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர், தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ஒற்றைத் தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும், அதனால்தான் தி.மு.க. மிகப் பெரிய வெற்றி பெற்றது”  என்று தி.மு.க.வில் இணைந்தபின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார்.

 

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz