"நான் கேட்கும் உறுதியளித்தால் இனி அணுஉலை தொடர்பாக போராட மாட்டேன்" - பிரதமர் மோடிக்கு சுப.உதயகுமாரன் சவால்!

Friday 28, June 2019, 21:52:04

பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர் யாராவது ஒருவர் “இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்திலுமிருந்து வெளிவரும் அனைத்துக் கழிவுகளையும் எங்கள் மாநிலத்தில் ஆழ்நிலக் கருவூலம் (Deep Geological Repository) அமைத்து புதைத்துக் கொள்ளுங்கள்” என்று ஒத்துக்கொண்டு, அதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து தனது சட்டமன்றத்தில் முறைப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தால், அந்த கணத்திலிருந்து, சுப. உதயகுமாரன் ஆகிய நான், கூடங்குளம் அணுக்கழிவு மையம், அணுஉலைப் பிரச்சினை என எதைப் பற்றியும் பேசவோ, போராடவோ மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

அல்லது அணுசக்தித் துறை அமைச்சரான பிரதமர் நரேந்திர மோடி தனது பா.ஜ.க. கட்சி ஆளும் மாநிலம் ஒன்றைத் தேர்வு செய்து, அந்த மாநிலத்தில்தான் “இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்திலுமிருந்து வெளிவரும் அனைத்துக் கழிவுகளையும் ஆழ்நிலக் கருவூலம் (Deep Geological Repository) அமைத்து புதைக்கப் போகிறோம் “ என்று அதிகாரபூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தால், அந்த கணத்திலிருந்து, சுப. உதயகுமாரன் ஆகிய நான், கூடங்குளம் அணுக்கழிவு மையம், அணுஉலைப் பிரச்சினை என எதைப் பற்றியும் பேசவோ, போராடவோ மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

மற்றபடி, தேர்தல் தோல்வி மற்றும் பதவியிழப்பு விரக்தியால், ஏமாற்றத்தால் ஏதேதோ பேசுகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை!

“கூடங்குளம் அணுமின் திட்டத்தை முதன்முதலில் எதிர்த்தது நான்தான்” என்று என்னிடமும், இடிந்தகரை போராட்டச் சகோதரிகளிடமும் சொன்னார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன்.

“ஒரு மருத்துவர் என்கிற முறையில் அணு உலைகளை ஆதரிக்கவே மாட்டேன” என்று என்னிடம் சொன்னார் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் மரு. தமிழிசை சவுந்தர்ராஜன்.

பதவி, பணம், புகழ், அதிகாரத்துக்காக தங்கள் மனசாட்சியையே அடகுவைத்து, சொந்த மக்களுக்கே துரோகம் செய்து, இரட்டை வாழ்க்கை வாழும் “தலைவர்களுக்கு” ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் - என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz