திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

Thursday 04, July 2019, 20:17:43

தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றி வந்த  சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அப் பொறுப்புக்கு தி.மு.கழக சட்ட திட்ட விதி 18,19 பிரிவுகளின்படி உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார்.


தி.மு.க. இளைஞரணியின் பிற பதவிகளுக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று இன்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன்,"திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இளைஞரணிச் பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல, கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும். தனது தந்தையை போலவே இளைய தலைமுறையினரை அவர் ஈர்ப்பார்.

ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி அவர் மிகுந்த ஆற்றல் மிக்கவர். உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நான் வியந்து போனேன். சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும்படி பேசுவார் உதயநிதி" என்று கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். மேலும் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினுடைய இந்த நியமனம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பினையும், முணுமுணுப்பினையும்  கிளப்பியுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz