ஈரோடு: செய்தியாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஜவுளி வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது.

Thursday 04, July 2019, 20:15:00

ஈரோட்டில் துணிக்கடை நடத்தி வந்த பெண்னிடம் பணம் கேட்டுக் கொலை மிரட்டல் விடுத்ததாக செய்தியாளர்கள் என்று வலம் வந்த  மூவரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பழனியப்பா டெக்ஸ்டைல்ஸ்  என்ற பெயரில் துணிக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்தக் கடையினை சீனிவாசனின் மனைவியான சசிகலா நிர்வகித்து வந்தார்.

நேற்று சீனிவாசன் தன் மனைவி சசிகலாவுடன் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ‘ஜூன் 24-ஆம் தேதி எங்கள் கடைக்கு வந்த மூன்று பேர் தங்களை என்று  அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

“அரசின் இலவச வேட்டி சேலையை நீங்கள் விற்பனை செய்கிறீர்கள். இதை நாங்கள் செய்தியாக வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் பத்திரிகையில் இதனைச் செய்தியாக போட்டு விடுவோம்” என்று மிரட்டினர்.

“தகுந்த ஆவணங்களுடன் கிழிந்த இலவச வேட்டி சேலைகளைத்தான் நாங்கள் வியாபாரம் செய்கிறோம். எதற்காக நான் உங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்?” என கேட்டேன்.

அதற்குத் தகாத வார்த்தைகள் பேசி உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய போலீஸார், வணக்கம் இந்தியா தினசரி மற்றும் அரசியல் முத்திரை ஆகியவற்றின் நிருபரான கார்த்திகேயன் சட்ட பஞ்சாயத்து மாத இதழின் நிருபரான கோபால், தனஞ்ஜெயன் ஆகிய மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் தாங்கள் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் என கூறி பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மேலும் சில முக்கிய செய்தியாளர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz