கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த இளம் ஜோடி வெட்டி படுகொலை 

Thursday 04, July 2019, 20:48:54

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த காதல் திருமணம் செய்த இளம் ஜோடி சோலைராஜ், ஜோதியை இன்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த திருமனி என்பவரது மகன் சோலைராஜ். இவர் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்துள்ளார். அதே உப்பளத்தில் விளாத்திகுளம் பல்லாகுளத்தினை சேர்ந்த அழகர் என்பவரது மகள் ஜோதி வேலை பார்த்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து விபரம் தெரியவரவே இருவரும் வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர் என்பதால் ஜோதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு தனி வீட்டில் அவர்கள் தங்கள் வாழ்வைத் தொடங்கினர்.

இந் நிலையில் இன்று காலையில் சோலைராஜ் வீடு வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்டவர்கள்  அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, வீட்டில் சோலைராஜ், ஜோதி இருவரும் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, குளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை எடுப்பதற்கு சோலைராஜ் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமதானப்படுத்தி உடல்களை அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்லாகுளத்தினை சேர்ந்த ஜோதி உறவினர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த ஜோடியை நள்ளிரவில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைத் தகவல்: சோலை ராஜ் - ஜோதி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜோதியின் தந்தை அழகரை , கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே குளத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz