உயிர் காக்கும் உற்ற தோழன் ஹெல்மெட்டை உதாசீனம் செய்யலாமா?

Sunday 07, July 2019, 20:53:57

சிறப்புக் கட்டுரை:

திருமதி. கல்கி 

“நான் ஏன் ஹெல்மெட் போடனும்? நான் வேகமாப் போறது இல்லையே, டிராபிக் ரூல்ஸ் பார்த்துத் தானே வண்டி ஓட்டுறேன். என்னோட பாதுகாப்ப பற்றி போலீசுக்கு என்னக் கவலை? இதெல்லாம் வியாபார தந்திரம் கம்பெனிக்காரங்க சதி! போலீசுக்கு வசூல் வேட்டை! விழுந்தா நாங்க பாத்துக்குறோம்” இப்படியெல்லாம் நிறைய வசனங்களை நம்மில் பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

நிஜத்தில் இவையெல்லாம் வாழ்வியலுக்கும் , நடைமுறைக்கும் சற்றும்  ஒத்துப் போகாத வீர வசனங்கள். ஆனால், நிஜம் அப்படியானது அல்ல. அதை உணரும் தருணங்களில் உங்களின் விலைமதிப்பற்ற உயிர் விரயமாகக் கூடப் போய் இருக்கலாம்.

நாம் வாங்கும் இருசக்கர வாகனங்களின் விலை சராசரியாக 20,000 முதல் தொடங்கி கணிசமாக சில லட்சங்கள் வரை நீள்கிறது. இந்த வாகனங்களை வழங்கும் போதே சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகனங்களைச் சார்ந்த தயாரிப்பு நிறுவனமோ, ஷோரூம்களோ கட்டாயமாகத் தகுதியான தயாரிப்புகளைக் கொண்ட ISI ஹெல்மெட்டுகளை இலவசமாகவோ, அல்லது கூடுதல் தொகையை வசூலித்தோ கட்டாயம் வழங்க வேண்டுமென்ற சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கட்டாய ஹெல்மெட் என்ற சட்டங்களை மீறி நடக்கும் பலர் அதற்கு “முடி கொட்டிவிடும்.. வேர்த்துக் கொட்டுகிறது... காது கேட்பதில்லை. சைட்ல வர வண்டி தெரியல” போன்றவற்றைக் காரணமாகச் சொல்லுகின்றனர்.

வியர்வையால் முடி கொட்டுகிறதென வாதத்தை முன் வைப்பவர்களை முடியை விட மூளை முக்கியமென்ற போதிய அறிவற்றவர்களாகவே பார்க்க முடிகிறது. வேர்த்துக் கொட்டுகிறதென்பவர்களுக்கு இனி சுவாசிக்க முடியாதென்ற சூழல் வந்தால் என்ன செய்வார்களோ? அருகில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்பவர்களுக்கு Side mirror என்ற பக்கவாட்டுக் கண்ணாடிகளை பொருத்தியிருக்க வேண்டுமென்ற புரிதல் இருப்பதில்லை.

சாலை சரியில்லை, சட்டம் சரியில்லை, போலிஸ் சரியில்லை,

ஹெல்மட் சரியில்லை, இப்படி எதுவுமே சரியில்லையென்று வாக்கு வாதங்களைச் செய்யும் நாம் மிகச் சரியாகத்தான் இருக்கிறோமா? எங்கள் உயிர் மீது அரசாங்கத்திற்கு என்ன பெரிய தனி அக்கறையென்று கேட்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். தனிப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் வாழ்வின் மீது அக்கறையும், பொதுநலனும் காக்க வேண்டிய உரிமை அரசாங்கத்திற்கும்,  அரசை நிர்வகிக்கும்  துறைகளுக்கும் உள்ளது.

1985-ம் ஆண்டே ஹெல்மெட் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-லும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது. டெல்லியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என 2014ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பின்னால் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கு கடுமையான சட்ட வரையறைகளை மேற்கொள்வதால் திட்டம் நடப்பில் வெற்றிகரமாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். தமிழகத்தில் விபத்தில் ஆண்டிற்கு 17 ஆயிரம் பேர் இறக்கின்றனர். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

தமிழகம்தான் சாலை விபத்து விகிதத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2017ல்  தமிழகத்தில் சாலை விபத்து 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு  சராசரியாக 60,000 சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் ஆண்டுதோறும் 17,000 பேர் உயிரிழக்கின்றனர்.

தமிழகத்தில் 2001ம் ஆண்டினை ஒப்பிடும்போது, 2017ல் வாகனங்கள் எண்ணிக்கை 156 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ல் சாலை விபத்தால் 16,157 பேர் உயிரிழந்துள்ளனர். 2018ல் 11,962 ஆகவும், 2019ல் 7,761 ஆகவும், பதிவாகியுள்ளது.

2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் சிக்கி 4,091 பேர் இறந்துள்ளனர். அதன் பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது. 6.4 சதவீதம் விபத்து குறைந்துள்ளது.

2016ல் நாள் ஒன்று சராசரியாக சாலை விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர். 2017ல் அது 44 ஆக குறைந்துள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் பைக்குகளால்(38.73 சதவீதம்) தான் ஏற்படுகிறது. பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான் 72 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு சராசரியாக  இன்றைய தினத்தில் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் இறப்பைத் தேடிச்செல்வது போல்

தலைக் கவசத்தை அணியாமல் தனது அலட்சியப்போக்கால் மரணத்தை தேடிச் செல்கிறார்கள்.

இனி, சில முக்கிய விபரங்கள் வினா விடையாக .....

பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்கள் என்ன தண்டனைக்கு ஆளாவார்கள்?

இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் – 1988, பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும்.

இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என்று போலீசார் கூறவில்லை சட்டம் கூறுகிறது.

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?

உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகை ஹெல்மெட்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.

1. ஓப்பன் ஃபேஸ் – அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காதவர்களுக்கு இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு. இந்த Open Face வகை ஹெல்மெட்கள் பெங்களூரு மற்றும் மைசூர் நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

2. ஃபுல் ஃபேஸ் – பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.

3.ஃப்ளிப் அப் – இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

4.மோட்டோ கிராஸ் – இதுவும் ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!.

ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.

நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை. ISI முத்திரை இல்லாத ஹெல்மெட்டை விற்கவோ, ஸ்டாக் வைத்திருக்கவோ கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, மக்கள்  ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஹெல்மெட் அணியாது சென்றால் காவலர் கைது செய்ய அதிகாரம் இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. ஆனாலும் உங்கள் வாயும், வாதத்தையும் பொறுத்து கைது, அல்லது மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டத்தில் கட்டாயம் இடம் உண்டு. பொது இடங்களில் காவலர்களை அநாகரீகமாக பேசுவது, அவர் மீது தாக்குதல் நடத்துவது, தனது அதிகாரம்,சிபாரிசு இவற்றைக் கொண்டு அவர்களை பணி நேரத்தில் பணி செய்ய விடாமல் தடுப்பதென்று தங்களது குற்றங்களின் அளவைப் பொறுத்து தண்டனையோ, அபராதமோ கட்டாயம்  விதிக்கப்படும்.

ஹெல்மெட் அணிந்தால் உயிருக்கு ஆபத்து வராதா?

கட்டாயம் வரும். பலரும் ஹெல்மெட் அணிந்திருப்பார்கள். ஆனால், ஹெல்மெட்யில் கொடுக்கப்பட்ட பெல்ட் கழன்று தொங்கிக் கொண்டிருக்கும் அல்லது, க்ளிப் இல்லாமலே கூட இருக்கும் இதெல்லாம் கடமைக்கு ஹெல்மெட் போடுபவர்களது கதை. நீங்கள் ஹெல்மட் அணிந்திருந்தால் மட்டும் போதாது சரிவர கொடுக்கப்பட்டுள்ள பெல்ட் அணிந்து க்ளிப் போடப்பட்டிருக்க வேண்டும் இல்லையேல் "ஆப்ரேசன் சக்ஸஸ் பட் பேசண்ட் டெத் என்ற கதை தான் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் ஒரு சிலரோ ஹெல்மட்டை கைக்குழந்தையைச் சுமப்பது போல் சுமந்து கொண்டேயிருப்பார்கள். தூரத்தில் காவலர்கள் கண்ணில் தென்பட்டால் மட்டும் தலையில் மாட்டிக் கொண்டு போக்கு காண்பிப்பதென்று நீங்கள் காவலரை ஏமாற்றலாம். காலனை ஏமாற்ற முடியாது. விதி முந்திக் கொண்டால் மரணம் நிச்சயம்.  உங்கள் தலைமுறையை காப்பாற்றவாவது தலைக்கவசத்தை அணியுங்கள். சிவப்பு விளக்கு எரியும் போது சமிக்ஞையை மதித்து நின்று செல்லுங்கள். வாகனம் ஓட்டும் போது சக வாகன ஓட்டிகளோடு வாக்குவாதம் செய்வது, முறைப்பது என்று கவனச் சிதறல்களால் நிறைய விபத்துகள் நடக்கிறது. சாலை விதிகளை மதித்து பயணிப்போமேயானால்  நம் பயணம் நிச்சயமாக பாதுகாப்பானதாக இருக்கும். தலைக்கனத்தை தூக்கியெறிந்து விட்டு தலைக்கவசத்தை வாங்கி அணியுங்கள். வாழ்க்கை இன்னொரு வாய்ப்பு கொடுக்காமல் போய் விட்டால் இழப்பு உங்களுக்குத்தான்.

நாங்கள் ஹெல்மட் அணியாது பயணித்தால் தவறா?

சரியோ, தவறோ அவசியமற்றது. உங்களின் உயிர் உங்களைச் சார்ந்தவர்களுக்கு விலைமதிப்பற்றது. விபத்து இழப்பீடு, காப்பீடு என்று எல்லாவற்றிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவசியமான ஹெல்மெட்டிற்கு கொடுங்கள். நீங்கள் சரியாக பயணித்தாலும் எதிர் வரும் வாகனங்களோ, பிறவாகனங்களோ உங்கள் மீது மோதினாலும் கூட தலைக்கவசம் உங்களின் உயிரை நிச்சயமாகக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும். சாகசமென்ற பெயரில் சட்டத்தை மதிக்காமல் நடப்பது. அதிவேகமாக வாகனங்களை இயக்குவது என்றெல்லாம் குற்றங்களை நிகழ்த்தாமல் மிகவும் தரமான அக்மார்க் முத்திரை கொண்ட தலைகவசங்களை வாங்கி அணியுங்கள். குற்றங்களையும், விபத்துக்களையும் குறையுங்கள். சட்டத்தை எழுதியவரோ, நடைமுறைப்படுத்துபவரோ உங்களுக்காக வாழப் போவதில்லை. நீங்கள் வாழும் இந்த  வாழ்க்கை விபத்துகளும்,இழப்புகளும் இல்லாது நிறைவான வாழ்வாய் அமையட்டும். என்னைக் கேட்க நீ யார் ? என்ற கேள்வியை தவிர்த்து நம்மை பாதுகாக்கும் சட்டங்களை மதித்து நடப்போம். விபத்துகளைத் தவிர்ப்போம்.

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz