மரித்துப் போன மனிதம்!

Tuesday 09, July 2019, 07:15:40

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வடிவேல்முருகன். இவர் விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவரின் மகன் ஆவார். 

இவருக்கும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி ஆர்.சி.தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கிரேஸி என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு வயதான ரோஸி ஏஞ்சல் என்ற மகள் உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக வடிவேல்முருகன் - கிரேஸி தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக  கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர்.

கிரேஸியைப் பிரிந்து வாழ்ந்த வடிவேல்முருகன் அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கம்புரத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது கிரேஸி தரப்பினருக்கு கடும் கோபத்தினையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

தன் சகோதரியைப் பிரிந்து வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட வடிவேல்முருகன் மீது அளவு கடந்த கோபம் கொண்ட கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்ற ஆஸ்டின் தனது மைத்துனரைப் பழிவாங்க முடிவெடுத்தார்.

இன்று வழக்கம் போல் பள்ளிக்கூடம் வந்து  பணியாற்றிக் கொண்டிருந்த வடிவேல்முருகனைத் தேடி கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் வந்தார். இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் நிதானமிழந்த  அற்புத செல்வம், சற்றும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து எடுத்து வந்திருந்த சூரிக் கத்தியால் வடிவேல் முருகனைக் குத்தினார். குத்துப் பட்டு சரிந்து விழுந்த வடிவேல் முருகன் தனக்கு உயிர்ப் பிச்சை அளிக்கும்படி அற்புத செல்வத்தின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினார்.

ஆனால், அதனைச் செவி கொடுத்துக் கேளாத அற்புத செல்வம் சரமாரியாகக் குத்தியதில் வடிவேல்முருகன் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.   அதிகளவு கத்திக் குத்துப்பட்ட வடிவேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பட்டப் பகலில் நடந்த இந்தக் கொடூரக் கொலையினை அந்த வழியாக சென்றவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். ஒரு சிலர் அந்தக் கொடூரத்தைப் பொறுப்புணர்வோடு தங்களது செல்போனில் பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். செத்துக் கொண்டிருந்த வடிவேல்முருகனை மனிதாபிமானத்தோடு காப்பாற்ற அவர்களில் யாரும் முன் வரவில்லை என்பது வேதனைக்குரியது.

தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz