நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறையின் ‘பொறுப்பான' விளக்கம்!

Monday 15, July 2019, 18:21:16

நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளை தமிழக எம்.பிக்களான செல்வராஜ், மாணிக்கம் தாகூர், ஆ.ராசா ஆகியோர் எழுப்பி  விளக்கம் கோரியிருந்தனர்.

நீட் தேர்வில் இருந்து எந்தெந்த மாநிலங்கள் விலக்கு கோரியுள்ளன? இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான சலுகையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? நீட் தேர்வு தோல்வியால் நாடு முழுவதும் நடைபெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

தமிழக எம்.பிக்கள் எழுப்பியிருந்த இந்தக் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இது குறித்த ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது..

அந்த அறிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டுள்ளன. நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசிடம் எந்த விதமான தகவலும் இல்லை மத்திய அரசு கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த சலுகையும் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தற்கொலை மற்றும் மரணம் குறித்து தகவல்களை சேகரித்து வைப்பது மத்திய சுகாதாரத் துறையின் பணி. அப்படியிருக்க நீட் தேர்வுத் தற்கொலை குறித்த எந்தத் தகவல்களும் தங்களிடமில்லை என்ற பதில் மத்திய அரசின் சார்பில் வெளியாகியிருப்பது அதிர்ச்சியினை  ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz