மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், சட்ட நகலை எரித்துப் போராட்டம்!

Thursday 25, July 2019, 23:45:42

மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து சேலம் அரசு கலை கல்லூரியை சேர்ந்த அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள், சேலம் அரசு கலை கல்லூரி முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்றும், குல கல்வி முறையை மீண்டும் புகுத்த முற்படும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் நடுவே திடீர் என புதிய கல்வி கொள்கைக்கான சட்ட நகலை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் மாணவர்களிடம் இருந்த சட்ட நகலை பிடுங்கிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து மாணவர்கள் கூறும் போது புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கவும், குல கல்வி முறையை புகுத்தவும் மத்திய பாஜக அரசு முயலுவதாகவும், சமூக நீதிக்கு எதிரான இந்த கல்வி முறையை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது என்றும், மத்திய பாஜக அரசு இந்த புதிய முடிவை கைவிடாவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz